ஜோகூர் தேர்தல் களம்: 56 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹரப்பான் போட்டி! மஸ்லி மாலிக் உள்ளிட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தங்காங்:

அடுத்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தங்களின் முழு வேட்பாளர்கள் பட்டியலையும் பக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் புதிய முகங்கள் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கிய ஒரு பலமான தேர்தல் வியூகத்துடன் கூட்டணி களம் இறங்கியுள்ளது.

நேற்று இரவு பாடாங் புக்கிட் காம்பிர் (Padang Bukit Gambir) மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில், பக்காத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ‘முன்னோக்கி ஜோகூர் ‘ (Johor ke depan) என்ற தேர்தல் முழக்கத்துடன் (Slogan) இத்தேர்தலை எதிர்கொள்வதாக அவர் அறிவித்தார்.

நகர்ப்புறம், அரை-நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அனுபவத்திற்கும் உள்ளூர் செல்வாக்கிற்கும் முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் தேசிய அளவில் அறியப்பட்ட முக்கியத் தலைவராக விளங்கும் முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக், புத்திரி வாங்சா (Puteri Wangsa) தொகுதியில் போட்டியிடுகிறார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும், 2018-2022 காலகட்டத்தில் ஜோகூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகராகப் பணியாற்றியவருமான சுஹைசான் காயாட், லார்க்கின் (Larkin) தொகுதியில் களம் காண்கிறார்.

முன்னாள் ஜோகூர் மாநில எக்சிகோ (Executive Councillor) உறுப்பினர் முகமட் குசான் அபு பக்கர், செமேரா (Semerah) தொகுதியிலும், DAP கட்சியின் நீண்டகாலப் பிரமுகர்களான ஆண்ட்ரூ சென் கா எங், ஸ்துலாங் (Stulang) தொகுதியிலும், ஆர்தர் சியோங் சென் செர்ன், புக்கிட் பத்து (Bukit Batu) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், வோங் போர் யாங் (செனாய்), லீ வென் யிங் (ஜோகூர் ஜெயா) மற்றும் ஆலன் டி பூன் சோங் (பெர்லிங்) ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன:

PKR: அதிகபட்சமாக 29 தொகுதிகளில் போட்டியிட்டு கூட்டணியின் முதன்மை சக்தியாக விளங்குகிறது (முக்கியமாகப் பலவின மக்கள் மற்றும் இழுபறி நிலவும் தொகுதிகள்).

DAP: தங்களின் பலத்த கோட்டைகளாகக் கருதப்படும் நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டு 17 தொகுதிகளில் களம் இறங்குகிறது.

Amanah: தெற்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும் DAP கட்சி சார்பில் இத்தேர்தலில் 7 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜேமந்தா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட இங் கோர் சிம், எலியா நதிரா சாபுடின் (தெனாங்), சொரயா பாதருடின் (சுங்கை பாலாங்), பெலிசியா போ ருய் லிங் (பெங்காராம்), சூ போ யீ (மெங்கோபோல்), யோங் ஹுய் யி (யோங் பெங்) மற்றும் தியோ சியூ ஹுய் (பெர்மாஸ்) ஆகியோர் அடங்குவர்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஸ்கூடாய் (Skudai) சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராகிமின் தொகுதிக்கு மாற்றாக, இம்முறை ஜே. கார்த்தியாயினி (J. Kartiyaini) அங்குப் போட்டியிடுகிறார். அடர்த்தியான வாக்காளர்களையும், கடுமையான தேர்தல் போட்டியையும் கொண்ட ஸ்கூடாய் தொகுதி, ஜோகூர் பாருவில் PH கூட்டணியின் மிக முக்கியமான நகர்ப்புறக் கோட்டையாகக் கருதப்படுகிறது.

இக்கூட்டத்தில் பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் அதிகாரப்பூர்வ மந்திரி பெசார் (Menteri Besar) வேட்பாளரை அன்வார் இப்ராகிம் அறிவிக்கவில்லை என்றாலும், டாக்டர் மஸ்லி மாலிக்கே அந்தப் பதவிக்கான முன்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

இருப்பினும், இதுகுறித்து மஸ்லி மாலிக்கைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இது தொடர்பாகக் கட்சிக்குள் இதுவரை நாங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை” என்று கூறி அந்த யூகங்களை அவர் மறுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here