விவசாயம், மீன் வளர்ப்பு வட்டாரப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது

சுங்கை பூலோ,

மலேசிய புள்ளி விவர இலாகா கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி தொடங்கிய விவசாயத்துறை கணக்கெடுப்பு நடவடிக்கை ஜூலை 28ஆம் தேதியோடு 22 தினங்களை நிறைவு செய்திருக்கிறது. நாடளாவிய நிலையில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வனத்துறை வெட்டுமர நடவடிக்கை என்ற நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்ட விவசாய நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விவரங்களைப் பற்றி அறிய இந்த நடவடிக்கை அத்தியாவசியமானதாகும்.

மலேசிய விவசாயத்துறைப் பற்றிய ஆக்கப்பூர்வமான, அண்மையத் தகவல்களைப் பெறுவதற்கான சிறந்த வழிமுறை இந்தக் கணக்கெடுப்புதான். கணக்கெடுப்பு வாயிலாகச் சேகரிக்கப்படும் விவரக் குறிப்புகள் யாவும் நாட்டின் விவசாயத்துறை ஆற்றலை வலுப்படுத்துவதற்குண்டான போட்டியாற்றலை உருவாக்கும் தன்மை கொண்ட திட்டங்களை வகுக்க உதவும்.

சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 67,727 விவசாயக் குடியிருப்புகளையும் (டிகேபி) விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 2,071 அமைப்புகளையும் இந்தக் கணக்கெடுப்பு உட்படுத்தி இருக்கும். 2024 ஜூலை 26ஆம் தேதி வரையில் மொத்தம் 17,874 டிகேபிகளில் (27.3%) விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் 13,573 டிகேபிகளில் கணக்கெடுப்புகள் முடிவடைந்து விட்டன. இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றன.

கணக்கெடுப்பு அதிகாரிகள், சிலாங்கூர் மாநில விவசாய சமூகத்தின் ஒத்துழைப்பும் இந்த அடைவுநிலைக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன என்று விவசாய கணக்கெடுப்புத்துறை ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார். சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியானதாகவும் முழுமையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் நிறைவான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து விவசாய உற்பத்தியாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி அவர் தெரிவித்துக் கொண்டார்.

கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் நேர்மையான வகையில் உண்மையான விவரங்களை விவசாய உற்பத்தியாளர்கள் வழங்கிட வேண்டுமாயும் அவர் கேட்டுக் கொண்டார். உங்களின் ஒத்துழைப்பே இந்தக் கணக்கெடுப்பின் உண்மையான வெற்றியாகும் மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தத் தகவல்கள் இன்றியமையாததாகும் என்றார் அவர்.

2024ஆம் ஆண்டு விவசாய புள்ளி விவரக் கணக்கெடுப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைந்திடும் வண்ணம் புள்ளிவிவரத்துறை ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மாஹிடின், சிலாங்கூர் மாநில கணக்கெடுப்புத்துறையின் துணை ஆணையர் (தொழில்நுட்பம்) புவான் ஹர்த்தினி யாக்கோப்பும் சுங்கை பூலோ கம்போங் குபு காஜாவில் நடைபெற்ற கணக்கெடுப்பைக் கவனிக்க நேரடியாகக் களத்தில் இறங்கிப் பார்வையிட்டனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக வருகை புரிந்தவர்களில் கண்காணிப்பாளர்களும் புள்ளிவிவர அதிகாரிகளும் கூட இந்நடவடிக்கைகளில் களமிறங்கினர். கடந்த 2014ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கையின் வாயிலாக 1 ஏக்கர் பரப்பள விலான நிலத்தில செராய் செடியை வெற்றிகரமாக நடவு செய்த புவான் மஸ்னோனும் இந்தக் கணக்கெடுப்பில் உட்படுத்தப்பட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஏ.ஆர்.சி. பெர்காப் அக்ரோ ஃபுட் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் அவர்கள் வருகை புரிந்தனர். உடலில் பூ வடிங்களைக் கொண்ட விறால் மீன் வளர்ப்பில் சாதனை படைத்த நிறுவனமாகும் இது. ரவாங்கில் 200 மீன் வளர்ப்புக் குளங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் மீன் வளர்ப்பு துறைக்கான பயிற்சிகளையும் வழங்குகிறது.

எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவையான அனைத்து விவசாய உள்ளடக்கங்களையும் கொண்ட புள்ளி விவரங்களுக்காக OpenDOSM NextGen என்ற மையக் கருவூலமும் மலேசிய புள்ளி விவரத் துறையால் தோற்று விக்கப்பட்டிருக்கிறது. portal https://open.dosm.gov.my. என்ற அகப்பக்கத்தின் வாயிலாக அந்த விவரங்களைத் தரவு செய்து கொள்ளலாம்.

புள்ளி விவரத்துறை இப்போது 2024ஆம் ஆண்டுக்கான விவசாய கணக்கெடுப்பை மேற்கொண்டிருக்கிறது. இதுகுறித்த மேல் விவரங்களைப் பெற https://www.myagricensus.gov.my/ என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். விவசாய கணக்கெடுப்பு , விவசாய மேம்பாட்டுக்கான திறவுகோல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தேசிய புள்ளி விவர தினமாக (MyStats Day) மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புள்ளிவிவரம் வாழ்வின் ஜீவநாடி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. மலேசிய புள்ளி விவரத்துறை தோற்றுவிக்கப்பட்டு இவ்வாண்டு 75 ஆண்டுகள் பூர்த்தி அடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here