சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவராக ரோபின் குஹா தகூர்த்தா பொறுப்பேற்றார்

டில்லிராணி முத்து

சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவராக சூப்பிரிண்டென்டன்ட் ரோபின் குஹா தகூர்த்தா, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் பின் ஓமார் கான் முன்னிலையில் பொறுப்பேற்றார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் குற்றப்புலன் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய டிஎஸ்பி ரோபின் குஹா தகூர்த்தா (வயது 59) தற்போது சூப்பிரிண்டென்டாக பதவி உயர்வு பெற்று சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 16ஆம் தேதி தொடங்கி சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த அதன் துணைத் தலைவர் டி.எஸ்.பி.காலிட் பின் முகமட்டிடமிருந்து தற்போது சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவராக பணியை ஏற்றுக் கொண்டார்.

சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்று கொண்ட ரோபின் குஹா தகூர்த்தாவிற்கு, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தம்முடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
சூப்பிரிண்டென்டன்ட் ரோபின் குஹா தகூர்த்தா தலைமையில் செயல்படவுள்ள இந்த சபாக் பெர்ணம் மாவட்டத்தில் பாதுகாப்பு வலுபெறுவதற்கு, பணித்திறன்கள் சிறப்பாக தொடர்ந்து நீடிக்கும் என தாம் நம்புவதாகக் கூறினார்.

மேலும் சிலாங்கூர் மாநிலத்திலேயே சபாக் பெர்ணம் மாவட்டத்தில் தான் குற்ற செயல்கள் குறைவாக இருக்கும் என்றும் தாம் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு சூப்பிரிண்டென்டன்ட் ரோபின் குஹா, இந்த சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையக குடும்பத்தில் ஒரு தந்தையாக இருந்து, அனைத்து நடவடிக்கைகளையும் செயல்களையும் நனிசிறந்த முறையில் மேற்கொண்டு சிறப்பாக வழிநடத்துவார் என்பதில் தமக்கு சிறிதளவும் சந்தேகமே இல்லை என்றார்.

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், நிம்மதியாகவும் வாழ சூப்பிரிண்டென்டன்ட் ரோபின் குஹா தலைமையில் செயல்படவுள்ள சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சேவைகள் மிகவும் சிறப்பாகவும் பொதுமக்களுக்கு திருப்தியளிக்கும் வகையிலும் இருக்கும் என்றும் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு இவ்விழாவில் டத்தோ ஹுசேனின் துணைவியார் டத்தின் லில்லியானா ஹர்யாத்தி,
சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா சுப்ரமணியம், மாவட்ட அரசு இலாகா அதிகாரிகள், சபாக் பெர்ணம் மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here