(கு.அன்பரசன்)
பீடோங்:
இங்குள்ள சுங்கை தோ பாவாங் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம ஆடவர்கள் இந்திய பாதுகாவலர் ஒருவரை சரமாரியாக வெட்டியதில் அவர் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.
அதன் பின் அக்கும்பல் அங்கிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமான் பீடோங் குடியிருப்பு பகுதிதிக்குச் சென்று அங்குள்ள கார் கழுவும் மையத்தில் இருந்த நரேந்திரன் சுப்பிரமணியம் (வயது 28) எனும் ஆடவரை சரமாரியாக வெட்டி வீழ்த்திவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
வெட்டப்பட்ட நரேந்திரன் சுங்கைபட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவ மனைக்குச் கொண்டுச் செல்லும் வழியில் மரணமுற்றார் என கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் வான் அஸாருடின் வான் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக வெட்டப்பட்ட பாதுகாவலர் நெஞ்சுப் பகுதியிலும் வலது மற்றும் இடது கைகளிலும் சரமாரியான வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஓட்டம் பிடித்தார்.
இதன் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சுங்கைபட்டாணி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 20 வயது முதல் 30 வயது மதிக்கத் தக்க 8 இந்திய ஆடவர்களை கோலமூடா மாவட்ட போலீசார் கைது செய்தனர். போலீஸ் புலன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.