இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் நாசா விண்வெளி வீரங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ், அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி எட்டு நாட்கள் பணிக்காக ஸ்டார் லைனர் விண்கலனில் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், அவரின் சகா பேரி புட்ஜ் வில்மோர் ஆகிய இருவரும் இரண்டு மாதங்களாகியும் பூமிக்கு திரும்ப முடியாமல் அனைத்துலக விண்வெளி நிலையத்திலேயே தங்கி இருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் நன்றாக இருக்கின்றனர். விண்வெளி பயணங்களில் ஏற்படும் எதிர்பாரா திருப்பங்களுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தயாராக இருப்பர் என்று நாசா செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
இவர்கள் பூமிக்கு எப்போது திரும்புவர் என்பது ஆகஸ்டு மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என்று நாசா கூறியது.









