கோலாலம்பூர்:
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சட்ட அமலாக்கத் துறையினரிடம் நேரடியாகச் சிக்குவதைத் தவிர்க்க, தற்போது பார்சல் மற்றும் கூரியர் விநியோகச் சேவைகளைப் புதிய ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன என்று குற்றவியல் நிபுணர் நூர் ஹஃபிஸா யூசோஃப் எச்சரித்துள்ளார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவர் இதுகுறித்துக் கூறுகையில், “கடத்தல்காரர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் போதைப்பொருட்களைப் பொம்மைகள், அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics) போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்குள் மிகச் சூட்சுமமாக மறைத்து வைத்து அனுப்புகின்றனர். கடத்தலில் புதிய உத்திகளைக் கையாண்டாலும், அவர்களின் ‘டிஜிட்டல் தடயங்களை’ (Digital Footprints) வைத்தே அதிகாரிகள் இத்தகைய சவாலான வழக்குகளைத் துரத்திப் பிடித்து வருகின்றனர்” என்றார்.
மேலும், பார்சல் விநியோகச் சேவை ஊழியர்கள் தங்களின் தினசரிப் பணியின் போது, வழக்கத்திற்கு மாறான முகவரிகள் அல்லது சந்தேகத்திற்குரிய விநியோக முறைகளைக் கண்டறிந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் வழங்கி, குற்றங்களைத் தடுக்கும் முக்கியக் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யூசோஃப் மாமட், அங்குள்ள பத்து முன்னணி கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து விழிப்புணர்வு ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து மலேசிய எக்ஸ்பிரஸ் கேரியர்ஸ் சங்கத்தின் தலைவர் ரொனால்ட் டான் பேசுகையில், “தினசரி லட்சக்கணக்கான பார்சல்களைக் கையாளுவதால் இத்துறை குற்றக் கும்பல்களால் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க, நவீன தொழில்நுட்பங்கள், தரவு பகுப்பாய்வு (Data Analytics) மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் (Advanced Surveillance) மூலம் பார்சல் சோதனைகளைச் சர்வதேசத் தரத்திற்கு வலுப்படுத்தி வருகிறோம்” என உறுதிப்படுத்தியுள்ளார்.




















