தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது வாசுகி பாம்பு வெளியிட்ட விஷம் தேவர்களை துரத்த துவங்கியது. இதனால் பிரளய காலம் ஏற்பட்டது. தேவர்கள், சிவனை மறந்து, ஆசையின் பிடியில் சிக்கிய தவறிற்காக அவர்களை ஆலகால விஷம் துரத்தியது. கடைசியாக தங்களின் தவறை உணர்ந்த தேவர்கள் சிவனை தஞ்சமடைந்தனர். உலக நன்மைக்காக ஆலகால விஷத்தை, வலம்புரி சங்கில் அடக்கி, அதை தானே பருகினார் சிவ பெருமான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தேவர்கள், சிவனை வழிபட்ட நேரமே பிரதோஷ தினமாக, ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசி திதியில் வரும் மாலை 4 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலமாக வழிபடுகிறோம்.
சனி பிரதோஷம் ஏன் சிறப்பு?
பிரளய காலத்தில் இருந்து உலகை காக்க சிவ பெருமான் விஷத்தை உண்டது சனிக்கிழமையில். பிரதோஷ வழிபாடு தோன்றிய நாள் சனிக்கிழமை ஆகும். கர்மகாரகன் என சொல்லப்படுபவர் சனி பகவான். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமானவர் சனி பகவான் தான். கிரகங்களிலேயே சனியால் ஏற்படும் பிரச்சனை தான் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டு விடும். கர்மவினைகள் குறைந்தால் சனியால் ஏற்படும் துன்பங்கள் குறையும். இதற்கு ஏற்ற நாள் என்பதால் தான் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவன் எதற்காக விஷத்தை குடித்தார்?
சிவ பெருமான் பாவங்களை அழித்து, நன்மைகளை வழங்கும் தெய்வம். ஆலகால விஷம் என்பது உலக மக்கள் செய்த பாவங்கள், தோஷங்கள் ஆகியவற்றை குறிப்பதாகும். இந்த பாவங்களே கர்மவினைகளாக மாறி உலக உயிர்கள் அனைத்தையும் துரத்திக் கொண்டே இருக்கிறது. தன்னிடம் தஞ்சடையும் அடியவர்களின் பாவங்களையும், தோஷங்களையும் தான் பருகி, உலக உயிர்கள் கர்மாவில் இருந்து விடுபட்டு, பரம்பொருளாகிய தன்னை வந்து அடைய வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். உலக மக்களின் தோஷங்களை ஏற்கும் சிவனை சுத்தம் செய்து, புனிதப்படுத்துவதற்காகவே அவரது தலையில் கங்கை எப்போது அமர்ந்து, நீரை பொழிகிறாள். இதன் காரணமாகவே பிரதோஷ காலத்தில் சிவனுக்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்து, அவரை அபிஷேக பிரியர் என பக்தர்கள் போற்றுகிறார்கள்.
நந்தியை வழிபடுவது ஏன் ?
பிரதோஷ காலத்தில் சிவனின் வாகனமான நந்தி தேவருக்கு முதலில் அபிஷேகம் நடந்த பிறகே சிவனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். சிவனுக்கு நடப்பது போலவே அனைத்து விதமான அபிஷேகங்கள், பூஜைகள் ஆகிய அனைத்தும் நந்திக்கும் நடத்தப்படும். உலக மக்களின் வழிபாடுகள், ஆசைகள் அனைத்தும் குடும்பத்தை சார்ந்ததாகவே இருக்கும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் என சொல்லப்படுவது 2ம் இடமான ரிஷபம். அந்த ரிஷபத்தின் வடிவமாக இருப்பவர் நந்தி தேவர் என்பதால், வாழ்வில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகள், கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக பிரதோஷத்தன்று நந்தியை வழிபட வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமல்ல பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவ பெருமான் காட்சி தருவதாக ஐதீகம். அதனால் தான் அவருக்கும் பிரதோஷ காலத்தில் அபிஷேகம், வழிபாடு நடத்தப்படுகிறது.