பெருமாள் 10 அவதாரங்கள் எடுக்க காரணம் இது தானா?

பெருமாளின் பத்து அவதாரங்களின் நோக்கம் என்ன என்பதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு அர்த்தம் புரியும். அவற்றை ஆழ்ந்து கவனித்தால் மற்றொரு அர்த்தம் புலப்படும். இந்த நோக்கங்கள் அனைத்தும் மக்களை நல்வழிபடுத்தி, மனித குலத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பதே ஆகும்.

திருமாலின் தசாவதாரங்களும், நோக்கங்களும்

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், “எப்போது எல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போது எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை மீண்டும் நிலை நாட்ட யுகம் தோறும் நான் அவதாரம் எடுப்பேன்” என்றார். அதன்படி, ஒவ்வொரு யுகம் அல்லது காலகட்டத்தில் ஒவ்வொரு அவதாரத்தையும் மகாவிஷ்ணு எடுத்துள்ளார். பெருமாள் இதுவரை ஒன்பது அவதாரங்கள் எடுத்து விட்டார். கலியுகம் முடியும் போது, மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட தனது பத்தாவது மற்றும் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை எடுக்க உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. பெருமாள் எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு காரணம், நோக்கம் உள்ளது. அப்படி ஒவ்வொரு அவதாரத்தையும் பெருமாள் எடுத்ததற்கான காரணம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மச்ச அவதாரம்

மனிதகுலத்தையும், வேதங்களையும் பெரும் பிரளயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டதே மச்ச அவதாரம் ஆகும். திருமால், மீன் வடிவத்தில் வந்து மனு முனிவர் மற்றும் அவரது குடும்பத்தையும். மற்ற உயிரினங்களையும், வேதங்களையும் பாதுகாப்பாக படகில் அழைத்துச் சென்று காப்பாற்றினார்.

கூர்ம அவதாரம்

மரண இல்லாத பெரு வாழ்வை தரும் அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைவதற்காக மந்தார மலையை தாங்கி பிடிக்க கூர்ம அவதாரத்தை எடுத்தார் திருமால். வெறும் அமிர்தத்திற்காக மட்டுமல்ல பாற்கடலை கடந்தால் தான் அதிலிருந்து காமதேனு, ஐராவதம், கற்பக விருட்சம், மகாலட்சுமி என உலகில் உள்ளவர்களை காக்கும் பெரும் மதிப்புமிக்க பொருட்கள் வெளிப்படுவதற்காக கூர்ம அவதாரம் நிகழ்த்தப்பட்டது.

வராக அவதாரம்

ஹிரண்யாக்ஷன் என்ற அசரன், பூதேவியை கடத்திச் சென்று கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான். பூமியை மீட்பதற்காக பெருமால் வராக அவதாரம் எடுத்து, நீரில் மூழ்கி, தன்னுடைய கொம்புகளால் பூமியை மீட்டு, சரியாக இடத்தில் வைத்தார். பூமியை நிலை நிறுத்தி, காப்பதற்காக வராக அவதாரம் நிகழ்த்தப்பட்டது.

நரசிம்ம அவதாரம்

தன்னுடைய பக்தன் பிரகலாதனை காப்பதற்காகவும், தான் பெற்ற வரங்களை தவறாக பயன்படுத்திய அசுர அரசன் ஹிரண்யகசபுவை வதம் செய்வதற்காகவும் பாதி மனிதன், பாதி சிங்கம் என தனித்துவமான நரசிம்ம அவதாரத்தை எடுத்தார் திருமால். ஹிரண்யன் பெற்ற வரங்களின்படியே அவனது மரணத்தை நிகழ்த்தினார். தான் எங்கும் நிறைந்திருப்பதையும், தன்னுடைய பக்தர்கள் அழைத்தால் அவர்களை காக்க எந்த வடிவத்தினாலும் தான் வருவேன் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம் ஆகும்.

​வாமன அவதாரம்

மூன்று உலகங்களையும் ஆள வேண்டும் என்ற பேராசை கொண்ட அசுர மன்னன் மாபலியின் அகந்தையை அழிப்பதற்காக குள்ளமான அந்தண சிறுவனின் உருவில் வந்து மூன்றடி நிலத்தை யாசமாக கேட்டார். பிறகு தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி தன்னுடைய மூன்று அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தார். தானே அனைத்திலும் நிறைந்திருப்பவன். இறைவன் எல்லைகளை கடந்தவன் என்ற உண்மையை உலகம் அறிவதற்காக எடுக்கப்பட்டதே வாமன அவதாரம் ஆகும்.

பரசுராம அவதாரம்

தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஷத்திரிய அரசர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்டது பரசுராம அவதாரம் ஆகும். தனது கோடாரியால் உலகையும், தர்மத்தையும் காப்பதற்காக தவறான ஆட்சியாளர்களை அழித்தார் பரசுராமர்.

ராம அவதாரம்

தன்னுடைய மனைவி சீதையை கடத்தி சென்ற அசுர மன்னன் ராவணனை வதம் செய்தார் ராமர். ஆனால் ராம அவதாரத்தின் நோக்கம் வெறும் ராவண வதம் மட்டும் கிடையாது. தர்மம், அறம், மன்னன், கணவன், தலைவன் ஆகியவர்களின் பொறுப்பு எது என்பதை விளக்குவதற்காக எடுக்கப்பட்டதே ராம அவதாரம் ஆகும்.

கிருஷ்ண அவதாரம்

அசுர மன்னன் கம்சனை வதம் செய்வதற்காக மட்டுமல்ல பகவத் கீதையில் தன்னுடைய போதனைகள் மூலம் மனிதகுலத்தை சரியான பாதையில் வழிநடத்தவும், கர்மாவில் இருந்து அவர்களை மீட்டு, பரமாத்மாவை அடையும் வழியை காட்டுவதே கிருஷ்ண அவதாரத்தின் நோக்கமாகும். ஒரு தெய்வீக காதலின் அடையாளம், பாதுகாவலர், ஆசிரியர் ஆசிரியர் ஆகிய பாத்திரங்களின் மதிப்பை உணர்த்துவதே கிருஷ்ணரின் வாழ்க்கை சொல்லும் உண்மை ஆகும்

சுகத புத்தர்

புத்தரும் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாகவே பெரும்பாலானவர்களால் நம்பப்படுகிறது. சுகத புத்தர் என்பதே பெருமாளின் ஒன்பதாவது அவதாரமாக நம்பப்படுகிறது. இவர் கிகடாவில் பிறந்து, அஞ்சனையின் மகனாக பிறந்து, திரிபுராசுரனை வதம் செய்வதற்காக எடுக்கப்பட்டதே இந்த நோக்கம் ஆகும். அதாவது நன்மைக்கு தீங்கு விளைவிப்பவர்களை அழித்து, நன்மையை காப்பதே இதன் நோக்கம்.

​கல்கி அவதாரம்

தற்போது நடந்து வரும் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கப் போகும் அவதாரமே கல்கி அவதாரம் ஆகும். கலி என்ற இரளை நீக்கி, மீண்டும் பூமியில் நன்மை என்னும் ஒளியை கொண்டு வருவதே கல்வி அவதாரத்தின் நோக்கமாகும். அதர்மம், தீமை ஆகியவற்றை அழித்து, தர்மம் மற்றும் உண்மை நிறைந்த புதிய யுகத்தை ஸ்தாபனம் செய்வதே கல்வி அவதாரத்தின் நோக்கம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here