இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தானின் முசகேல் மாவட்டத்தில் இன்று அதிகாலை இச்சம்பவம் நடந்திருக்கிறது.
இன்று அதிகாலை முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில், பயணிகள் பேருந்து ஒன்றும், டிரக் ஒன்றும் பயங்கரவாதிகளால் வழிமறிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, இரண்டு வாகனங்களிலிருந்துவர்களை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற பயங்கரவாதிகள், அவர்களை சுட்டு கொன்றிருக்கின்றனர். மட்டுமல்லாது அவர்கள் வந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு தரப்பினரும் பயங்கரவாதிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உதவி ஆணையர் முசக்கைல் நஜீப் கக்கர் கூறுகையில், “ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு ஒன்று, நெடுஞ்சாலையில் பேருந்தை மறித்து, அதில் இருந்தவர்களை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இப்படி, சில லாரிகளும் மறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரின் ஐடி பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. இதில், பஞ்சாப்பை சேர்ந்தவர்களை மட்டும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர். 10 வாகனங்கள் தீ வைக்கப்பட்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றியுள்ள போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பயங்கரவாதச் சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்களை கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகளும், அவர்களுக்கு உதவுபவர்களும் இதற்கான பதிலை சொல்லியே ஆக வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் மத்திய தகவல் துறை அமைச்சர், அத்தாவுல்லா தராரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பலமுறை பஞ்சாபை சேர்ந்தவர்களை குறி வைத்து இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம், நோஷ்கிக்கு அருகே பேருந்தில் பயணித்தவர்களை வழி மறித்த ஆயுதம் ஏந்திய கும்பல், பஞ்சாபை சேர்ந்த 9 பேரை மட்டும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் இதேபோல 6 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.