ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஏரிகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தெலுங்கானா அரசாங்கம், ‘ஹைதரா’ எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதாப்பூரில் திம்மடி குண்டா ஏரியின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற தீர்மானித்து, சனிக்கிழமை அப்பகுதியில் பல கட்டடங்களை காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் இடித்தனர்.
அங்கு நடிகர் நாகார்ஜுனா ‘என் கன்வென்ஷன்’ எனும் பெயரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டியுள்ள நிலையில் இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், சுமார் 3.5 ஏக்கர் வரை ஏரி நிலத்தை ‘என் கன்வென்ஷன்’ ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அந்த கட்டடங்களை இடித்தனர்.
இதையடுத்து நடிகர் நாகார்ஜூனா ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தார். கட்டடங்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரினார். இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது.
ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் இல்லை. இது முற்றிலுமாக பட்டா நிலம் ஆகும். அந்த கட்டடங்களை இடிப்பதற்கு முன் ஒரு ‘நோட்டீஸ்’ கூட வழங்கப்பட வில்லை. ஒருவேளை அது ஆக்கிரமிப்பு கட்டடங்களாக இருந்தால், நானே முன்னின்று இடித்திருப்பேன் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.




















