பாட்னா: கைப்பேசியில் விளையாட தன் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பதால் ஆடவர் ஒரு சாவிக்கொத்தையும், இரு நகவெட்டிகளையும், ஒரு கத்தியையும் விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலம், மோத்திஹாரியில் நிகழ்ந்தது.
இணையம் வழியாகப் பலர் சேர்ந்து விளையாடும் ‘பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா’ என்ற விளையாட்டை அவர் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, அந்த இரும்புப் பொருள்களையெல்லாம் அவர் விழுங்கினார். அப்படியும் சிறிது நேரத்திற்கு அவர் நலமாக இருந்தார்.
சில மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதும் மோத்திஹாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஊடுகதிர்ச் சோதனையில் அவர் விழுங்கிய பொருள்கள் தெரிந்தன.
அவர் ஒரு சாவிக்கொத்து, ஒற்றைச் சாவி, இரண்டு நகவெட்டிகள், ஒரு கத்தி ஆகியவற்றை விழுங்கிவிட்டார். கைப்பேசியில் விளையாட விடாத ஆத்திரத்தில் அவர் அவற்றை விழுங்கினார். இப்போது, ஆபத்தான நிலையைக் கடந்து, நலமாக உள்ளது என்று டாக்டர் அமித் கூறினார்.



















