துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் இந்தியர் நல சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி எடுத்த அதிரடி நடவடிக்கையால் லங்காவி வாழ் இந்தியர்களின் குடிநீர் சிக்கலுக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டது.

முதல் கட்டமாக மூன்று நீர் சேமிப்பு தொட்டிகள் நிறுவப்பட்டன. அவற்றை நிர்மாணிப்பதற்கான மொத்த செலவு முப்பதாயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தொட்டியிலும் எண்ணாயிரம் லிட்டர் வரையில் நீரை சேமிக்க முடியும்.தூய்மையான நீர் அங்கு விநியோகிக்கப்படுகிறது.தொடக்கமாக தாமான் சுங்கை ராயாவில் அந்த நீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தாமான் சுங்கை ராயா, கம்போங் பெலாங்கா பெச்சா, கம்போங் கிசாப், கம்போங் தெலுக் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் ஏறத்தாழ ஐயாயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

ஏனைய பகுதிகளிலும் நீர் சேமிப்புத் தொட்டிகள் கட்டப்படும் என அரவிந்த் உறுதி அளித்தார்.தாமான் சுங்கை ராயா இந்திய குடியிருப்பாளர்களுடான கலந்துரையாடலில் அரவிந்த் பங்கேற்றார்.

கல்வி, பொருளாதாரம், சமூகம் ஆகிய நிலைகளில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் அவர் சொன்னார்.





















