Alien: Romulus Review: ஸ்பேஸில் மிரட்டும் ஏலியன்!

‘அதே டெய்லர், அதே வாடகை’ என்பதாக ஒரு குறுகிய வெளி, அதில் ஏலியனுடன் மாட்டிக்கொள்ளும் குழுவினர் என சுட்ட தோசையையே பிரெஷ்ஷாக பரிமாற முயன்றிருக்கின்றனர்.

1979-ல் இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் இயக்கத்தில் வெளியான ‘ஏலியன்’ திரைப்படம் ஒரு ‘கல்ட்’ அந்தஸ்தினைப் பெற்றது. 1983-ல் அதன் இரண்டாம் பாகத்தை ஜேம்ஸ் கேமரூன் எடுக்க, டேவிட் ஃபின்ச்சர், பால் W.S.ஆண்டர்சன், மீண்டும் ரிட்லி ஸ்காட் எனப் பல இயக்குநர்கள் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து இதனை மாபெரும் பிரான்சைஸாக கட்டமைத்தனர்.

தற்போது இந்தப் படத்தொடரின் 9வது படமாக வெளியாகியிருக்கிறது இந்த `ஏலியன்: ரோமுலஸ்’ (Alien: Romulus). இது 1979-ல் வெளியான `ஏலியன்’ படத்துக்கும், 1983-ல் வெளியான `ஏலியன்ஸ்’ படத்துக்கும் இடையில் நடக்கும் கதை என்றாலும் ஒரு தனிப்படமாகவும் ரசிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

பேரண்டத்தின் பல கிரகங்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவற்றிலிருக்கும் வளங்களைச் சுரண்டி வருகிறது வேலேண்டு-யுடானி கார்ப் (Weyland-Yutani Corp) என்ற பெருநிறுவனம். அப்படி ஒரு கிரகத்தில் ஆதரவற்றவராக அதன் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்கிறாள் ரெயின். அவளுக்குத் துணையாக இருக்கிறது அவளின் தந்தை கண்டெடுத்த ரோபோவான ஆண்டி. மனித உருவிலிருக்கும் அதை தன் சகோதரனாகப் பாவிக்கிறாள் ரெயின். இதனிடையே இந்த அடிமை வாழ்க்கையை விடுத்து சுதந்திர கிரகமான வாகாவிற்கு (Yvaga) செல்லும் ஒரு வாய்ப்பு ரெயினுக்குக் கிடைக்கிறது.

அவளின் முன்னாள் காதலனும் சில நண்பர்களும் விண்வெளியில் பயனற்று மிதந்துவரும் ஒரு விண்கலத்திலிருக்கும் க்ரையோ பாடுகள் (Cryo Pods) உதவியுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அந்த விண்கலத்திலிருக்கும் ஆபத்துகள் என்னென்ன, அதிலிருந்து தப்பித்து ரெயினும் அவளின் நண்பர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்களா இல்லையா என்பதே இந்தப் பாகத்தின் கதை.

கதையின் நாயகி ரெயினாக வரும் கெய்லி ஸ்பேன்னி தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் பலம் சேர்த்திருக்கிறார். அடிமை வாழ்க்கை வாழ்பவர் சுயமரியாதை மிக்கவராக, பாசத்துக்கும் ஏங்குபவராக நம் மனத்தில் நிறைகிறார். படம் நெடுக அவர் தரும் புத்திசாலித்தனமாக டெக்னிக்கல் யோசனைகளும் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஆண்டி என்ற ‘சிட்டி’ ரோபாவாக வரும் டேவிட் ஜான்சனின் நடிப்பு மிரட்டல். தெளிவான கட்டளைகள் இருந்தாலும் அதைத் தன் அறத்தில் பொருத்திப் பார்த்து முகத்தில் குழப்ப ரேகைகளைப் படரவிடும் இடம், ரோபாவாகத் தொழில்நுட்ப சிக்கல்களில் சிக்கித் தவிக்கையில் வெளிப்படுத்தும் உடல்மொழி, க்ளைமாக்ஸில் காட்டும் தெளிவு எனப் படம் நெடுக அமர்க்களப்படுத்தியிருக்கிறார். வில்லனாக ஹாரர் ட்ரீட் வைக்கும் செனோமார்ப் (Xenomorph) மற்றும் அது தொடர்பான வரைகலைக்கு ஒரு `வல்லிய’ அப்ளாஸ்! அதேபோல பெரும்பாலான காட்சிகள் ரோமுலஸ் – ரெமஸ் என இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் விண்கலத்தில் நடந்தாலும் எங்குமே போராடிக்காமல் காட்சிகளை நகர்த்தியிருக்கின்றன ஒளிப்பதிவும் நேர்த்தியான தயாரிப்பு வடிவமைப்பும்!

‘ஏலியன்’ பிரான்சைஸ் பற்றிய ஆரம்பக்கட்ட புரிதல் இருந்தாலே போதும் என்பதாகப் புரியும்படியான திரைக்கதையுடன் இதை வார்த்திருக்கும் இயக்குநர் ஃபெட் அல்வராஸுக்கு (Fede Álvarez) பாராட்டுகள். ஆரம்பக்கட்ட வேற்றுக்கிரகக் காட்சிகள் கடந்து விண்கலத்தில் ஏறியதும் தடதடக்கிறது திரைக்கதை. எப்படியும் ஹாரர் டிரீட்மென்ட்டில் ஏலியன் அனைவரையும் தாக்கும் என்பதைக் கணிக்க முடிந்தாலும் அதைத் தேர்ந்த நடிப்பில் சுவாரஸ்யமான மேக்கிங்கில் அமர்க்களப்படுத்தியிருக்கிறது படக்குழு. குறிப்பாக ‘ஜீரோ கிராவிட்டி’யில் நடக்கும் ரணகள க்ளைமாக்ஸ் அட்டகாசமான மேக்கிங். ஆங்காங்கே வரும் டெக்னிக்கல் ஐடியாக்களும் காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கின்றன.

அதே சமயம், இதே வழிமுறையில் இன்னும் எத்தனை படங்கள் எடுப்பார்கள் என்ற கேள்வியும் எட்டிப் பார்க்கவே செய்கிறது. ‘அதே டெய்லர், அதே வாடகை’ என்பதாக ஒரு குறுகிய வெளி, அதில் ஏலியனுடன் மாட்டிக்கொள்ளும் குழுவினர் என சுட்ட தோசையையே பிரெஷ்ஷாக பரிமாற முயன்றிருக்கின்றனர். அது எக்ஸ்பையரி ஆகவில்லை என்பது ஆறுதல். ஆனாலும் பிரான்சைஸை உருவாக்கிய ரிட்லி ஸ்காட்டே அடுத்தடுத்த பாகங்களில் கொஞ்சம் தடுமாற, கமெர்ஷியலாக சரியான ரூட்டில் பயணித்து அந்தப் பழைய பிரான்சைஸுக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறது இந்த ‘ஏலியன்: ரோமுலஸ்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here