கோலாலம்பூர்:
பள்ளிப் பேருந்தில் மாணவிகளை வீடியோ படமெடுக்கும் ஓட்டுநரின் அத்துமீறிய செயல்
பள்ளிக்கூட பேருந்தில் பயணிக்கும் மாணவிகளை வீடியோ படம் பிடித்து அதனை சமூக வலைத்தளத்தில் இடம்பெறச் செய்யும் ஓட்டுநரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்ட மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி சம்பந்தப்பட்ட விவகாரம் உடனடியாகப் புகார் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுபற்றி சிறார் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் உடனடியாக காவல்துறையில் புகார் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக குறிப்பிட்ட அவர் ஜோகூர் மாநில காவல்துறை தலைமையகத்தின் மகளிர் சிறார் பாலியல் துன்புறுத்தல் விசாரணைப் பிரிவோடு இதன் தொடர்பில் ஒத்துழைக்கவும் அமைச்சு தயார் என்று கூறினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதோடு அதனை யதார்த்தமான விஷயமாகவும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களின் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து கொள்வது சம்பந்தப்பட்ட சிறார்களின் தனிப்பட்ட விவகாரங்களில் அத்துமீறும் நடவடிக்கையாகும். சிறார் சட்டத்தின் கீழ் இத்தகு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர் மேற்கோள்காட்டி தமது எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
640,000 பார்வையாளர்களால் பின் தொடரப்படும் டிக்டோக் கணக்கரான அந்த இளம் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் பயணம் செய்யும் ஓர் இளம் மாணவியை தனது காதலி என்று குறிப்பிட்டு அவர் முகம் தெள்ளத் தெளிவாகத் தெரியும்படி காணொளியைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
மேலும் அடிக்கடி அவர் பேருந்து ஓட்டிக் கொண்டே அதில் பயணிக்கும் பிள்ளைகளைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் காட்சியாக்கிக் கொண்டிருக்கிறார். அவரது வீடியோக்களுக்கு 10.5 மில்லியன் லைக்குகள் வரை கிடைத்திருக்கின்றன.








