2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

புதுடில்லி:

”அடுத்த 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன்,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவால் இப்போது தான் ஜாமினில் விடுதலையாகி உள்ளார். கைது செய்யப்பட்டபோதும், சிறையில் இருந்தபோதும், பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கெஜ்ரிவால், இப்போது ஜாமினில் விடுதலையாக உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

கஷ்ட காலங்களில் எங்களுடன் இருந்த கடவுளுக்கு மிக்க நன்றி. பெரிய எதிரிகளுடன் போரிட்டுள்ளோம். நமது கட்சி தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், அமானதுல்லா கான் இன்னும் சிறையில் உள்ளார்கள். அவர்கள் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என நம்புகிறேன். இன்னும் 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளேன். 2 நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

முதல்வர் பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நவம்பரில் மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் டில்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளேன். நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். நான் நேர்மையானவன் என என கருதினால் மக்கள் எனக்கு ஓட்டளிக்கட்டும். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு தான், முதல்வர் நாற்காலியில் அமர்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here