பினாங்கு:
மலேசியாவில் சில்லுத் தயாரிப்புத் துறையில் ஏற்கெனவே 90,000 ஊழியர்கள் உள்ள நிலையில், அதற்கு மேலும் 60,000 பொறியாளர்கள் தேவைப்படுவதாக மின்கடத்தித் துறைச் சங்கத் தலைவர் வோங் சியு ஹாய் கூறியுள்ளார்.
மலேசியாவின் 575.45 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான செழிப்பான சில்லுத் தயாரிப்புத் துறையை ஊக்குவிக்க திறனாளர்களைக் கொண்டிருப்பது முக்கியம். இத்துறை, உலகளாவிய ஏற்றுமதிக்கு 7 விழுக்காடு பங்களிக்கிறது. 2030க்குள் இந்த மதிப்பை 1.2 டிரில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கவும் உலக ஏற்றுமதிக்கு 15 விழுக்காடு அளவு பங்களிக்கவும் இத்துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசியாவின் பகுதி மின்கடத்தித் துறையாகக் கருதப்படும் பினாங்கில் இன்டெல், இன்ஃபினியோன் போன்ற பெருநிறுவனங்கள் இயங்குகின்றன. ஆனால், உலகளாவிய பகுதி மின்கடத்தி விநியோகத் தொடரில் மேலேறுவதை மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030க்குள் அது US$1 டிரில்லியனுக்கும் அதிக மதிப்புடையதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, நுண்சில்லுத் தயாரிப்பு நிறுவனமான வீராக் (Weeroc), 2025 முதல் காலாண்டிற்குள் சிலாங்கூரில் உள்ள அதன் அலுவலகத்தில் 20 மில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்யவுள்ளது. ஐந்து பிரெஞ்சு மூத்த நிர்வாகிகளையும் 11 மலேசியப் பொறியாளர்களையும் பணியமர்த்த அது திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 பேர் அடங்கிய ஊழியரணியாக விரிவடைய அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகளவில் பெருநிறுவனங்கள் தங்கள் விநியோகத் தொடரை பல்வகைப்படுத்த, செயல்பாடுகளையும் மனிதவளத்தையும் தென்கிழக்காசியாவுக்கு இடமாற்றம் செய்துவரும் வேளையில், அமெரிக்கா – சீனா இடையிலான போட்டியால் மலேசியாவின் சில்லுத் தயாரிப்புத் துறை பயனடைந்துள்ளது.
பினாங்கு அதன் திறனாளர் கூட்டத்தை ஈர்த்து, தக்கவைத்துக்கொள்ள முடியும் என முதல்வர் சோவ் கோன் இயோ நம்பிக்கை தெரிவித்தார்.
“மலேசியாவில் 30க்கும் மேற்பட்ட கணினிச் சில்லுத் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவற்றில் 28 நிறுவனங்கள் பினாங்கில் இயங்குகின்றன,” என்றார் அவர்.