மல்லேஸ்வரம்: பெங்களூரு மாநகராட்சி விளையாட்டு மைதானத்தின் நுழைவாயில் இரும்பு கேட் விழுந்ததில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மாலை தன் சைக்கிளுக்கு செயின் போடுவதற்காக, நிரஞ்சன் தன் நண்பர்களுடன் சென்றார். சைக்கிள் செயின் போட்ட பின், வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளனர்.
மைதானத்தின் நுழை வாயில் கேட், 10 அடி உயரம் உள்ளது. கேட்டை பிடித்து இழுக்கும் போது, நிரஞ்சன் மீது கேட் விழுந்தது. இதில், நிரஞ்சனின் வாய், தலையில் படுகாயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.
அங்கிருந்தவர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் என்பதால், அப்பகுதியில் இருந்தவர்கள், இரு சக்கர வாகனத்தில் நிரஞ்சனை, மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிறுவன் உயிரிழந்தான்.
அப்பகுதியினர் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டு களில், இந்த மைதானத்தின் கதவை நான்கு முறை சரி செய்துள்ளனர். இப்பகுதி மோசமாக உள்ளது. மணல் போட வேண்டும்; ஆனால், போடவில்லை.
பலமுறை போராட்டம் நடத்தப்பட்டது. புதிய கேட் போட்டதாக மாநகராட்சியில் இருந்து பணம் மட்டும் பெற்றுள்ளனர். இதற்கு முன்னரும்,இது போன்று கேட் விழுந்துள்ளது’ என்றனர்.தகவல் அறிந்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மருத்துவமனைக்கு சென்று, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
மகனை இழந்த பெற்றோருக்கு, தனது சொந்த பணத்தில் இருந்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். முதல்வர், மாநகராட்சி கமிஷனரிடம் பேசி, தேவையான நிதியுதவி பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார்.
பின், அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:விளையாட்டு மைதானத்தின் கேட் விழுந்து சிறுவன் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கேட் போடப்பட்டு உள்ளது. கேட்டின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இப்பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் பகுதி சாலை உட்பட பல புகார்கள் கூறியுள்ளனர். அவை எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளது. ‘கேட்’ மோசமான நிலையில் உள்ளதாக, யாரும் என் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. அப்படி கொண்டு வந்திருந்தால் சரி செய்யப்பட்டிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
சைக்கிள் செயின் போட செல்வதாக, அவனது நண்பனுடன் சென்றார். ஆனால், அவன் மீது கேட் விழுந்து இறந்ததாக கூறுகின்றனர். என் மகன் உடலை பார்க்க, எனது கணவர் அனுமதிக்கவில்லை. மகனை இழந்த நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.
நடக்க கூடாத சம்பவம் நடந்துவிட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் தவறா அல்லது பூங்கா ஒப்பந்தம் எடுத்தவர்களின் தவறா என்பது குறித்து விசாரிக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இத்தகைய அசம்பாவிதம் நடக்காத வகையில், அனைத்து பூங்காக்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.





















