மூவார்:
மூவாரின் ஜாலான் சாலையில் வழக்கமான போக்குவரத்து சாலைக் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை சோதனையிட்டதில், வரி செலுத்தாமல் கடத்தப்பட்டதாக நம்பப்படும் 800க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 25) மதியம் 3 மணியளவில் போக்குவரத்து விதிமீறலுக்காக மூவார் காவல்துறை போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தியதாக மூவார் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.
“வாகனத்தை சோதனை செய்தபோது, வரி செலுத்தாமல் கடத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு பிராண்டுகளின் மொத்தம் 830 சிகரெட் பெட்டிகளை போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) கூறினார்.
அதேநேரம் 21 வயதான அவ்வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார், மேலும் வாகனம், சிகரெட்டுகள், கைத்தொலைபேசி மற்றும் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 176,462 ரிங்கிட் என்று அவர் சொன்னார்.
இவ்வழக்கு சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(d) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும், கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு ACP ரைஸ் முக்லிஸ் கேட்டுக் கொண்டார்.













