சமூகத்தை உலுக்கும் இணையப் பகடிவதை எதிர்கொள்வது எப்படி?

பகடிவதை என்பது முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டிய ஒரு தீய செயலாகும். இன்றைய நவீன யுகத்தில் தொழில் நுட்பத்தின் அடிப்படையாக விளங்கும் இணையத்திலும் இந்த பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுபோன்ற பகடிவதைச் சம்பவங்கள் நிகழ்வதை நாமே கண்கூடாகப் பார்க்க நேரிடுகிறது.
குறிப்பாக தனிப்பட்ட ஒரு நபர் அல்லது அமைப்பு ஒரு குழுவினரைச் சாடி செய்யப்படும் கருத்துப் பதிவானது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எதிர் மறையாக விமர்சிக்கும் அளவுக்கு உள்ளது. இதனால் அவர்களுக்கு தீய விளைவுகள் ஏற்படுகின்றன. அண்மையில் தலைநகரில் ஒரு சமூக வலைத்தள பிரபலத்தின் மரணம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மரணத்திற்கு மூலகாரணம் பகடிவதைதான் என்பதை அனைவரும் அறிவர். இது ஒரு சம்பவம்தான்.
ஆனால் இதுபோன்ற பல சம்பவங்கள் தினந்தோறும் நிகழ்வதை நாம் மறுக்க முடியாது. மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்தின் (எம்சிஎம்சி) செயல்பாடுகள் உயிரைப் பறிக்கும் அளவிற்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் இந்த இணையப் பகடிவதையை முற்றாகத் துடைத்தொழிக்க அரசாங்கம் எப்போதுமே முனைப்புக் காட்டி வருகின்றது. அதற்காகவே எம்சிஎம்சி தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றது.
பொதுவாக இணையதளப் பகடிவதைகள் குறித்து எழுப்பப்படும் புகார்கள் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்புடைமையைக் கொண்டுள்ள முதன்மை அமைப்பு இந்த ஆணையமாகும். இணையப் பகடிவதையால் பாதிக்கப்படுவோர் எம்சிஎம்சியில் புகார் அளிப்பதன் வழி அவர்கள் அந்தப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காண முடியும். ஆனாலும் ஒரு சிலர் இந்த இணையப் பகடிவதையினால் ஏற்படும் நெருக்கடியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சில சமயங்களில் தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மாணவர்கள், இளைஞர்களிடையே இணையப் பகடிவதையின் தீமைகளை விளக்குவதற்கும் எம்சிஎம்சி பல்வேறு நடவடிக்கைகள், பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இந்த இணையப் பகடிவதைச் சம்பவங்கள் நிகழ்வதால் அந்தப் பிரிவினருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த எம்சிஎம்சி முயல்கின்றது. நேரடியாகவும் மெய்நிகர் முறையிலும் ஊடகங்கள் வாயிலாகவும் எம்சிஎம்சி இந்தப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் இணையப் பகடிவதையால் பாதிக்கப்படுவோர் எப்படிப் புகார் அளிக்க வேண்டும், அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை எம்சிஎம்சி தொடர்ந்து வழங்கி வருகிறது.
மக்கள் ஓசையின் சமூகக் கடப்பாடு இந்தச் சூழலில் நாட்டின் முதன்மை ‘ஊடகங்களுள் ஒன்றான மக்கள் ஓசையும் தனது சமூகக் கடப்பாட்டினைப் புலப்படுத்தும் வகையில் எம்சிஎம்சி உடன் இணைந்து இணையப் பகடிவதைச் சம்பவங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்துடன் ஒத்துழைப்பை நல்கி மக்களிடம் இந்த இணையப் பகடிவதைச் சம்பவங்கள் என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் யாவை? அந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விவரங்களைப் பகிர மக்கள் ஓசை முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் மக்கள் ஓசை குழுமமும் எம்சிஎம்சியும் அண்மையில் சந்திப்பு நடத்தின. மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபாலகிருஷ்ணன், எம்சிஎம்சி தலைவர் டான்ஸ்ரீ முகமட் சலிம் ஃபாத்தே ஆகியோர் நேரடியாகச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலின் வாயிலாக இணையப் பகடிவதைப் பிரச்சினையைத் துடைத்தொழிக்க மக்கள் ஓசையின் பங்களிப்பு குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இனி சுமார் 12 வாரங்களுக்கு மக்கள் ஓசை நாளிதழில் இந்த இணையப் பகடிவதை விவகாரம் குறித்த பிரத்தியேக கட்டுரைகள் வெளிவரும். அதேபோல மக்கள் ஓசையின் சமூக வலைத்தளப்பக்கங்களிலும் இந்தக் கட்டுரை, காணொளி வடிவில் வெளியிடப்படும். இணையப் பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்கள், மனோவியல் மருத்துவர்கள், எம்சிஎம்சியின் அதிகாரிகள், போலீஸ்அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரின் பிரத்தியேக நேர்காணலும் இந்தப் பிரசுரிப் பில் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here