இண்டர்நெட் பயனீட்டாளர்களைக் காக்கும் தகவல் சேவை வழங்குநர் லைசென்ஸ்

பி.ஆர். ராஜன், தி. மோகன், பிரகாஷ்வேலு

பயனீட்டாளர்கள், இண்டர்நெட் தனிநபர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே தகவல் சேவை வழங்குநர்கள் லைசென்ஸ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கிட்டத்தட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான இணையதளப் பயனீட்டாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பயனீட்டாளர்கள், தனிநபர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு லைசென்ஸ் கட்டமைப்பின் கீழ் அனைத்து இண்டர்நெட் தகவல் சேவைகள் மேலும் சமூக ஊடகங்கள் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் நிறுவனங்கள் 1998 பல்லூடகச் சட்டத்தின் (CMA 1998) கீழ் Applications Service Provider Class Licence (ASP (C)) லைசென்சுக்கு விண்ணப்பம் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று மலேசியத் தகவல் பல்லூடக ஆணையத்தின் (MCMC) துணை நிர்வாக இயக்குநர் டத்தோ ஸுல்கர்னாய்ன் முகமட் யாஸின் கூறினார்.

தகவல் சேவையில் ஃபேஸ்புக், எஸ்எம்எஸ், டெலிகிராம், எக்ஸ் இஸ்ன்டாகிராம் போன்றவை அடங்கும். பயனீட்டாளர்கள் உரிமைகளையும் பாதுகாப்புமிக்க ஆன்லைன் சுற்றுச்சூழலை உறுதி செய்வதற்கும் இந்த முறைப்படுத்தப்பட்ட நடைமுறை அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார். இத்துறையில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பரந்த அனுபவம் பெற்றிருக்கும் டத்தோ ஸுல்கர்னாய்னை இணையதளப் பகடிவதை தொடர்பில் மக்கள் ஓசை நேரில் சந்தித்தது. இணையதளப் பகடி என்பது வார்த்தைகளால் ஒருவரின் உயிரைப் பறிக்கும் ஒரு கொடிய ஆயுதமாக இப்போது தலையெடுத்திருக்கிறது.

சைபர் பகடிவதை, ஆன்லைன் மோசடி துன்புறுத்தல், ஆபாசப் புகைப்படங்கள், போதைப்பொருள் வியாபாரம், ஏமாற்று, சிறார் பாலியல் விபச்சாரம் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு இணையதளச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ASP (C) லைசென்ஸ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன்வழி சட்டத்திற்குப் புறம்பான, பாதகமான தகவல்களுக்கு சேவை வழங்குநர் பதில் சொல்ல வேண்டிய, பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதை டத்தோ ஸுல்கர்னாய்ன் தெளிவுபடுத்தினார்.

மேலும் இச்சேவை வழங்குநர் மலேசியாவில் அலுவலகங்களைக் கொண்டிருப்பதற்கும் அவற்றை முழுமையாகக் கண்காணிப்பதற்கும் இந்த லைசென்ஸ் வகை செய்கிறது. இதை முறைப்படுத்தும் அணுகுமுறை பயனீட்டாளர்களையும் தனிநபர்களையும் எந்த அளவிலும் பாதிக்காது என்று அவர் உறுதி அளித்தார்.

கே: இந்நடவடிக்கை பொதுமக்களின் அல்லது பயனீட்டாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு எவ்வாறு உதவுகிறது?

ப: அண்மைய ஆண்டுகளாகவே ஆன்லைன் கெடுதல்கள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் போக்கை புள்ளி விவரங்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான தகவல்கள், விளம்பரங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023இல் 20,175ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2024 ஜூலை வரை 75,120ஆக அதிகரித்தது. அரை ஆண்டிலேயே இந்த எண்ணிக்கை 270 விழுக்காடு அதிகரிப்பு ஆகும்.

அதேசமயம் இணையதள மோசடிகள் 2022இல் 245 சம்பவங்களாக இருந்தன. இந்த எண்ணிக்கை 2024 ஜூலை வரை 32,955ஆக உயர்வு கண்டிருக்கிறது. தொந்தரவுகள் தொடர்பான சம்பவங்கள் 2022இல் 290ஆக இருந்த நிலையில் 2024 ஜூலை வரை மொத்தம் 6,353 எனப் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அதிகரித்து வரும் சம்பவங்களை விரிவான, ஆழமான முறையில் நெறிப்படுத்தும் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கிறது.

லைசென்ஸ் பெற்றிருப்பதன் வழி 1998 பல்லூடகச்சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு சேவை வழங்குநருக்கு இருக்கிறது. அதன் விதிமுறைகளையும் லைசென்ஸ் நிபந்தனைகளையும் அனுசரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. 1998 பல்லூடகச் சட்டம் பிரிவு 263 கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் பொது கடமைகளைப் பின்பற்ற வேண்டிய பொறுப்புடைமை சேவை வழங்குநருக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மலேசியச் சட்டத்தின் கீழ் குற்றம் விளைவிக்கும் சேவை வழங்குநருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் வகை செய்யப்படுகிறது. இன்றளவிலும் இச்சேவையை வழங்கும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் தலைமையகங்களைக் கொண்டிருப்பதால் மலேசியச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.

இதுதவிர சேவை வழங்குநர்கள் பின்பற்ற வேண்டிய மேலும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிக் கோட்பாட்டையும் எம்சிஎம்சி அறிமுகம் செய்யும். பயனீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அதில் உள்ளடங்கி இருக்கும். மேலும் சிறார் பாதுகாப்பு நடவடிக்கைகள், மலேசிய சட்டங்களை மதித்தல் போன்றவற்றையும் சேவை வழங்குநர் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் அதில் இடம்பெற்றிருக்கும்.

சிறார் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள், வெறுப்புணர்வை விதைக்கும் உரைகள், சட்டத்திற்குப் புறம்பான தகவல்கள், தகவல்கள், வன்முறை அல்லது சுய தீங்கு விளைவிப்பது போன்றவற்றுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் தார்மீகக் கடமையும் பொறுப்பும் சேவை வழங்குநருக்கு இருக்கிறது என்பது இச்சட்டத்தின் வழி தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

தீங்கு விளைவிக்கும் தகவல்கள் பரவலாக வைரலாவதற்கு முன்னதாக அவற்றை அடையாளம் கண்டு நீக்கும் பொறுப்பும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என்பது இச்சட்டத்தில் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

கே: சுதந்திர உரையைத் தடுக்காமல் சமூக ஊடகங்களை முறைப்படுத்த முடியுமா?
ப: மற்ற நாடுகளைப் போன்று மலேசியாவும் சமூக ஊடக விதிமுறைகளைச் சமப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறது.

தனித்துவமான பரிசீலனைகள், கலாச்சாரம், மலேசிய சட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இதற்குத் தீர்வுகாணும் வழிமுறைகளும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. மலேசியப் பிரஜை ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையும் கருத்துரிமையும் இருப்பதை மலேசியகூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் விதி 10 உரிமை வழங்குகிறது என்று டத்தோ ஸுல்கர்னாய்ன் கூறினார்.

பாதிக்கப்படுவோர் புகார் செய்ய: http://aduan.mcmc.gov.my/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here