கோத்தா பாரு, டிசம்பர் 28 :
குவா மூசாங்கில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, மாநிலத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை போலீசார் சுட்டுக் கொன்றதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷஃபியன் மாமட் தெரிவித்த்தார்.
அந்தச் சம்பவத்தில் 29 மற்றும் 36 வயதுடைய இருவரே போலீசாரின் துப்பாக்கிச் சூட்டினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ‘ஆடிக் மாட்’ என்ற கொள்ளை மற்றும் போதைப்பொருள் விநியோக கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அக்குழுவின் தலைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
மாநில காவல்துறை தலைமையகம் மற்றும் குவா மூசாங் மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த D9 குழுவினர் காலை 11.30 மணியளவில் சிறிய ரப்பர் தோட்டத்திற்குள் ஒரு குடிசையை சோதனை செய்தனர்.
“போலீஸ் குழு அந்த இடத்திற்கு வந்தவுடன், குடிசையின் வெளியே ஒரு சந்தேக நபர் நின்றுகொண்டிருந்ததைக் கண்டனர், மற்றொருவர் உடனடியாக குடிசையிலிருந்த ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க முயன்றார்.

“இரண்டு சந்தேக நபர்களையும் போலீசார் சுட்டுக் கொல்வதற்கு முன்பு, தப்பியோட முயற்சித்த சந்தேக நபர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்தது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் இந்த நடவடிக்கையின் போது கிளந்தான் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் மற்றும் குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ ஆகியோர் உடனிருந்தனர்.
சோதனையின் போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள் மற்றும் 1,200 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியதாக ஷாஃபின் கூறினார்.
இவர்கள் இருவரும் போதைப்பொருள் மற்றும் ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“இருவருக்கும் பல முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறிப்பாக குவா மூசாங்கில் இந்தக் குழு செயல்பட்டு வருகின்றது.
இறந்த சந்தேக நபர்களில் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு காவல்துறையின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்ததாக ஷஃபின் கூறினார்.
மீதமுள்ள குழு உறுப்பினர்களை போலீசார் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.





















