கோத்தா கினபாலு:
சபா மாநிலத்தில், பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்த யானைக்குட்டி ஒன்று மீட்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கப்பட்டதாக சாபா வனவிலங்குத் துறையின் இயக்குநர் ரோலன்ட் நுயின் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக அந்த யானைக்குட்டி யானைக்கூட்டத்திடமிருந்து பிரிந்ததாக நம்பப்படுகிறது.
பள்ளத்தாக்கில் விழுந்த அந்த யானைக்குட்டியை வனவிலங்குத்துறை அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்டனர்.
யானைக்குட்டி மீட்கப்படுவதைக் காட்டும் காணொளிகள் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் டிக்டோக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. முதலில் அந்த யானைக்குட்டி பயந்ததாகவும் தோட்டத் தொழிலாளிகளை இடித்துத் தள்ளி அங்கிருந்த ஓட முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரம் கழித்து அது அமைதியானது. பின்னர் அங்கிருந்து அந்த யானைக்குட்டியை அருகில் இருந்த வனப்பகுதிக்கு வனவிலங்குத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
அதற்கு முன்பு பெண் யானை ஒன்று அங்கு சுற்றிக்கொண்டிருந்ததை மற்ற அதிகாரிகள் கண்டதாக அவர் சொன்னார். “பெண் யானையை அந்த யானைக்குட்டியை பார்த்தவுடன் அதை நோக்கி அது மிகுந்த எச்சரிக்கையுடன் சென்றது. யானைக்கன்று அருகில் சென்ற அந்தப் பெண் யானை அதை முகர்ந்தது. அது தன்னுடைய குட்டிதான் என்று உறுதி செய்த பிறகே அதை அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வனத்துக்குள் சென்றது,” என்று நுயின் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இரு யானைகளும் பத்திரமாக வனத்துக்குள் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.









