சுங்கை மூடா நீர்மட்டம் சரிவு: மேக விதைப்பு நடத்த பினாங்கு அரசு கோரிக்கை!

கோலாலம்பூர்:

பினாங்கின் முக்கிய நீர் ஆதாரமான சுங்கை மூடாவில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கெடா மாநிலத்தின் மேற்பகுதியில் செயற்கை மழையைத் தூண்டும் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், லாஹார் தியாங் பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் வழக்கமான 2 மீட்டரிலிருந்து 1.27 மீட்டராகக் குறைந்துள்ளதால், பினாங்கு நீர் வாரியம் (PBAPP) தனது நீர் சுத்திகரிப்புத் திறனில் 30 சதவீதத்தை இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க விரிவுபடுத்தப்பட்ட மெங்குவாங் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெரிஸ் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து கெடா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்; தற்போதைய வறட்சியைக் கருத்தில் கொண்டு, விவசாயத் தேவைகளை விடக் குடிநீர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தேசிய நீர் சேவை ஆணையத்திடம் (SPAN) பினாங்கு நீர் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here