பாருங்க, இதுதான் கடித்தது.. கையில் விஷ பாம்புடன் மருத்துவமனையை அலறவிட்ட நபர்

பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த நபரை உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்று கடித்தது. பாம்பு கடிப்பட்ட நபர் அடுத்து செய்த விஷயத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

பிரகாஷ் மண்டல் என்ற நபர், தன்னை கடித்த விஷ பாம்பின் வாயை பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார். பாம்பு கடித்த நிலையில், அதனை கையில் வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்த நபரை பார்த்து டாக்டர்களும், நோயாளிகளும் திகைத்தனர்.

சிறிது நேரம் காத்திருந்த நபர் வலி தாங்க முடியாமல், கையில் பாம்பை வைத்துக் கொண்டு அங்கேயே படுத்துக் கொண்டு சிகிச்சைக்காக காத்திருந்தார். மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

நோயாளிகளின் உதவியாளர்கள் அந்த நபரின் கையிலிருந்து பாம்பு தப்பித்துவிட்டால், எதுவும் நடக்கலாம் என்று பயந்து தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கிருந்த வேறொரு நபர் பிரகாஷின் கையைப் பிடித்து அவரை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

கையில் பாம்பை வைத்திருக்கும் நபருக்கு எப்படி சிகிச்சையளிக்க முடியும் என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் மருத்துவர்கள் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தொடர்ந்து தாமதமானதை அடுத்து பிரகாஷ் அந்த பாம்பை விடுவித்துள்ளார். அவருக்கு அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டதா, அவரின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here