10 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பின்னாலிருந்த 7 வயது சிறுவன் பலி -மற்றோரு சிறுவன் காயம்

பாலிங்:

நேற்று வியாழன் (அக். 17) கம்போங் சாருக் பூத்தே என்ற இடத்தில், 10 வயது சிறுவன் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில், 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான், அவர்களது நண்பன் பலத்த காயமடைந்தான் என்று கூறப்படுகிறது.

10 வயதுடைய சகோதரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் நடு ஆசனத்தில் பயணித்த 7 வயது இளைய சகோதரன் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னால் உட்கார்ந்து பயணித்த 10 வயதுடைய அவர்களது நண்பன் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மாலை 3.30 மணியளவில் இரவுச் சந்தை வியாபாரிகளான மூன்று பேரை ஏற்றிச் சென்ற வேன், கம்போங் சாருக் பூத்தேயில் இருந்து கம்போங் சுராவுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக, பாலிங் மாவட்ட காவல்துறை இடைக்கால தலைவர் சுப்ரிண்டன்ட் அஸ்மி மொக்தார் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை அடைந்ததும், மோட்டார் சைக்கிள் திடீரென இடதுபுறம் உள்ள சந்திப்பில் இருந்து வெளிப்பட்டு வலதுபுறம் திரும்ப முயன்றதால், அதைத் தவிர்க்க முடியாமல் போன வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

“மோதலின் விளைவாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையின் வலதுபுறத்தில் உள்ள வடிகால் ஒன்றில் தூக்கி எறியப்பட்டார், அதே நேரத்தில் அவரது தம்பியும் அவர்களது நண்பரும் வேனின் முன் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஏழு வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், அவனது சகோதரனுக்கு கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களது நண்பருக்கு வலது கால் உடைந்துள்ளதுடன் உடல் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

26 வயதான வேன் ஓட்டுநருக்கு கால்கள் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வேனில் பயணித்த 46 மற்றும் 22 வயதுடைய அவரது இரு பயணிகள் காயமடையவில்லை என்றும் அஸ்மி கூறினார்.

“இறந்தவரின் உடல் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது, அதே நேரத்தில் காயமடைந்த இருவரும் பாலிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

மேலும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here