குவாந்தான்:
மியன்மார் நாட்டினர் சம்பந்தப்பட்ட மனித கடத்தல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, லிப்பிஸில் உள்ள இரண்டு உள்ளூர் ஆண்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, ஜாலான் லிப்பிஸ்-மெராபோ, பாடாங் தெங்குவில் 25 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற நிசான் நவரா நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர் என்று, லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டன்ட் இஸ்மால் மான் கூறினார்.
சோதனையின் போது ஐந்து மியன்மார் பிரஜைகள் வாகனத்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் அனைவரிடமும் சரியான பயண ஆவணங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
அதே நடவடிக்கையில் லிங்ககரன் தெங்கா உத்தாமா நெடுஞ்சாலையில் (LTU) அவுர் காடிங் சந்திப்பு, பாடாங் தெங்கு அருகே, சாலையோரத்தில் ஹோண்டா அக்கார்ட் வகை கார் நின்றதைக் கண்டதாகவும், அதனை சோதனையிட்டதில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களைக் கொண்ட நான்கு மியன்மார் பிரஜைகளுடன் 49 வயதான உள்ளூர் ஆடவர் காரை ஓட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர்களிடம் சரியான பயண ஆவணங்கள் இல்லை,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எனவே, இரண்டு உள்ளூர் ஆண்களும் புலம்பெயர்ந்தோர் ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் எதிர்ப்பு சட்டம் பிரிவு 26J ATIPSOM 2007 (சட்டம் 670) இன் படி விசாரணைகளுக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் 12 மற்றும் 37 வயதுடைய ஒன்பது மியன்மார் பிரஜைகள், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்ததற்காக குடிநுழைவு சட்டம் 1959/63 இன் பிரிவு (1) (c) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர் என்றார்.