மேற்கு வங்காளம்: குளத்தில் மிதந்த சிறுமியின் உடல் – குற்றம் சாட்டப்பட்டவரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பயிற்சி டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், தற்போது அங்கு மற்றொரு கொடூர பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்காளத்தின் அலிபுர்தார் மாவட்டத்தில் உள்ள பலகட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி, நேற்று மாலை காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோர் கிராமம் முழுவதும் தங்கள் மகளை தீவிரமாக தேடி அலைந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மோனா ராய் என்ற நபருடன் சிறுமியை கடைசியாக பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் மோனா ராயின் வீட்டிற்குள் நுழைந்து தேடியபோது, வீட்டில் இருந்த படுக்கையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே சிறுமியின் உடல் கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை மோனா ராய் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மோனா ராயை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து போலீஸார் சமபவ இடத்திற்கு செல்வதற்குள், மோனா ராயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர். மேலும் போலீசாரை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அதிக அளவிலான போலீஸார் வரவழைக்கபட்டு, போராட்டம் கலைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடலையும், மோனா ராயின் உடலையும் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பக்தா ராய் என்ற நபர் உள்ளூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சிறுமியின் கொலையில் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும், கிராம மக்கள் தன்னையும் அடித்துக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் போலீசில் சரணடைந்ததாகவும் பக்தா ராய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அலிபுர்தார் மாவட்ட எஸ்.பி. ரகுவன்ஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், சிறுமியை மோனா ராய் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குற்றத்தைச் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு நபர் பக்தா ராயும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமியின் உடல் குளத்தில் வீசப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விரிவான தகவல்கள் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here