கோயில் அருகே கூடினால் கைது செய்வோம்: ஹிந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை

பிராம்ப்டன் : கனடாவில் தாக்குதல் நடத்தப்பட்ட கோயில் அருகே போராட்டம் நடத்த சட்டவிரோதமாக கூடினால் கைது செய்வோம் என ஹிந்துக்களுக்கு கனடா போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் ஹிந்து சபை கோயில் உள்ளது. இங்கு இந்திய தூதரகம் சார்பில் அங்குள்ள இந்தியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இங்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். ஹிந்துக்கள் ஒவ்வொருவரையும் குறி வைத்து ஓட ஓட விரட்டி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இச்சம்பவத்திற்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் அதிருப்தி தெரிவித்தது. பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பிராம்ப்டன் பகுதி ஹிந்துக்கள், கோயில் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அப்பகுதி போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடக்கும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஆயுதங்கள் காணப்பட்டன. இந்த பகுதிக்கு பொது மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு சட்டவிரோதமாக கூடி உள்ளனர். அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அனைவரும் கலைந்து செல்ல வேண்டும். அல்லது கைது செய்யப்படுவீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் போலீஸார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here