ஹமாசை எதிர்த்து போரிடும்.. இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றும் 2 இந்திய பெண்கள்

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களும் பணியாற்றி வரும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கடந்த ஓராண்டாகவே சர்வதேச அளவில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. உலக அளவில் பொருளாதார ரீதியிலும் இந்த போரால் தாக்கம் ஏற்பட்டது. ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து உக்ரைன் -ரஷ்யா போர் நீடித்துக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பான செய்திகளே சர்வதேச அளவில் அதிகம் அடிபட்டுக்கொண்டு இருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டது ஹமாஸ் இயக்கம்.

பாலஸ்தீனத்தின் காசாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது திடீரென ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே உரசல் இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த போர் வெடித்துள்ளது.

ஹமாசை முழுமையாக ஒழித்துக்கட்டுவோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீதான தாகுதலை தீவிரப்படுத்த தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இருந்தாலும் போருக்கான விதிகளை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போரால் இரு தரப்பிலும் சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. போரினால் அப்பாவி மக்கள் பறிபோவதற்கு சர்வதேச சமூகங்களும் கவலை தெரிவித்துள்ளன. இதனிடையே, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுகாக அந்நாட்டு ராணுவத்தில் சேவை செய்யும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களும் எல்லையில் சண்டைக்கு தயாராக இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல் வருமாறு:-

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றும் பெண் வீராங்கனைகளில் நிதிஷா மற்றும் ரியா ஆகிய இரண்டு பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரின் தந்தையுமே இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் அருகே உள்ள கோடடி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்து விட்ட இவர்களின் தந்தைகள் அங்கேயே குடியுரிமையும் பெற்று செட்டில் ஆகிவிட்டனர்.

இதில் நிதிஷாவின் தந்தையான ஜிவாபாய் முனியாசியா இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகரில் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார். தனது மகள் இஸ்ரேல் ராணுவத்தில் சேவை செய்வது குறித்து பெருமையுடன் பேசும் ஜிவபாய், ஏற்கனவே லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய எல்லைகளில் இரண்டு ஆண்டுகள் ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான சண்டையின் போது குஷ் டெனி போர்க்களத்தில் நிஷா ராணுவ சேவையில் ஈடுபட்டார் என்றார்.

தற்போது நிஷா இஸ்ரேல் ராணுவத்தின் கம்யூனிகேஷன் மற்றும் சைபர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றொறு இந்திய வம்சாவளி வீராங்கனையான ரியா, கமண்டோ டிரெயினிங் எடுத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ராணுவத்தில் சேவை செய்வது கட்டாயம் ஆகும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் கட்டாய ராணுவ சேவையான 2 ஆண்டுகள் 8 மாதங்கள் என்பதை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்று அந்த நாட்டு சட்டம் சொல்கிறது. இஸ்ரேல் ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here