மலாக்கா அலோர் காஜாவில் உள்ள மஸ்ஜித் தானாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர் மோதியதில் தெனகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) ஒப்பந்தத் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். சைராசி ரஹ்மத் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஜாலான் ஜெராமில் இரவு 8.50 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சைராசி (24) என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலோர் காஜா காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமாஹ் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் 34 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சைராசியின் பாதையில் எதிர்த் திசையில் நுழைந்து அவர் மீது மோதியது கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டார், பின்னர் இறந்துவிட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் தலையில் காயம் அடைந்த கார் ஓட்டுநர் அலோர் காஜா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். வேலையில்லாத ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அஷாரி கூறினார். மது மற்றும் போதைப்பொருள் உள்ளடக்கத்தை சரிபார்க்க அவரது இரத்த மாதிரி மலாக்கா வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.