மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான சரவாக் கடலோரப் பகுதியில் கிடைக்கப்பெறும் எண்ணெய், கியாஸ் வளங்கள் யாருக்குச் சொந்தமானது என்ற உரிமைப் போராட்டம் பெட்ரோனாஸ், சரவாக் இடையே தற்போது சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
1974 பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் (PDA) பிரிவு2 பெட்ரோனாஸுக்கு முழு உரிமையை வழங்குவதோடு கரையோரம், கடலோரம் உள்ள அனைத்துப் பெட்ரோலிய பிரத்தியேக உரிமைகளை பெட்ரோனாஸுக்கு வழங்குகிறது.
மறுபுறம் 1958 எண்ணெய், சுரங்க சட்டத்தின்கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வளங்கள் யாவும் தனக்குச் சொந்தமானவை என்று சரவாக் கோரி வருகிறது. 1974 பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள உரிமை தொடர்புடைய பிரிவு மாநிலத்தின் எண்ணெய், சுரங்கச் சட்டத்திலும் இடம்பெற்றுள்ளது என்று சரவாக் தொடர்ந்து வாதிட்டு வருகிறது.
குறிப்பிட்ட கடலோரப் பகுதி 1954ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய எல்லைக்குட்பட்டதாக இருக்கிறது. இந்த எல்லைகள் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவில் இணைந்த பிறகும் அப்படியே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்று சரவாக் கூறி வருகிறது.
லூசோனியா சோல்ஸ் பகுதி உட்பட தென்சீனக் கடலில் வளமிக்க சுரங்க வளங்கள் மீதும் தனக்குள்ள உரிமைகளை முன்வைத்து பெட்ரோனாஸ் தொடர்ந்து போராடி வருகிறது. இந்தப் போராட்டம் ஒரு குறிப்பிடத்தக்க சர்ச்சையாக மாறி வருகிறது.
நாட்டின் எண்ணெய் , கியாஸ் வளங்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு இந்தப் பகுதியிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. மலேசியாவின் திரவக இயற்கை கியாஸ் (LNG) பெட்ரோனாஸின் LNG ஏற்றுமதியில் 90 விழுக்காட்டை நிறைவு செய்வதாக இருக்கிறது.
பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் ஓர் ஒப்பந்தத்தின்கீழ் 5 விழுக்காடு எண்ணெய் ராயல்டி மட்டுமே சரவாக்கிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் அண்மைக் காலமாக அனைத்து எண்ணெய், கியாஸ் விற்பனைகளில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தில் மிகப் பெரிய பங்கை வழங்க வேண்டும் என்று சரவாக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தன்னுடைய இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக தன்னுடைய கடல்பகுதியில் உள்ள அனைத்து வளங்களுக்கும் முழு சட்ட உரிமையைக் கொண்டிருக்கிறது என்று சரவாக் வாதிட்டு வருகிறது.
ஆனால் இந்த எண்ணெய் வளம் சரவாக் மாநிலத்திற்குச் சொந்தமானது அல்ல என்று தெங்கு ரஸாலி ஹம்ஸா கூறுகிறார். பெட்ரோனாஸிற்கு உள்ள உரிமையோடு ஒப்பிடும்போது சரவாக் உரிமை பெற்றிருக்கவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சரான தெங்கு ரஸாலி குறிப்பிட்டார்.
இது அவர்களுடைய எண்ணெய் அல்ல. 1963 மலேசியா உடன்பாடு தயாரிக்கப்பட்டநேரத்திலும் இவ்விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்று அவர் சொன்னார். ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ராயல்டி ஒப்பந்தத்தின் கீழ் சரவாக் அதன் கடப்பாடுகளைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஓர் ஒப்பந்தம் என்பது ஓர் ஒப்பந்தமே. அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்று தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸின் முதல் தலைவரான தெங்கு ரஸாலி குறிப்பிட்டார்.
இந்நிலையில் உரிமை கோருவதற்கு சரவாக்கிற்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
- சரவாக்கின் கடல் எல்லைகள்
1963ஆம் ஆண்டுக்கு முன்னர் சரவாக் பிரிட்டிஷ் காலனியின் ஒரு பகுதியாக இருந்தது. கூட்டரசு மலேசியாவில் இணைந்த பின்னரே சரவாக் சுதந்திரம் பெற்றது.
காலனி ஆட்சியின் கீழ் இருக்கும்போது 2ஆவது எலிஸபெத் மகாராணி 1954ஆம் ஆண்டு சரவாக் எல்லை சீரமைப்பு ஆணையை வெளியிட்டார் என்று 9 ஆண்டுகளுக்கு முன்னர் சரவாக் கோரியது.
இந்த விரிவுபடுத்தப்பட்ட காலனி எல்லைகளுக்குள் கடல் படுகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை சரவாக் கொண்டிருந்தது. இதன்மூலம் மாநிலத்தின் நீர் எல்லைப் பகுதியின் கீழ் காணப்பட்ட எண்ணெய் வளங்கள் அதற்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது.
மலேசியாவின் ஒரு பகுதியாக சரவாக் இடம்பெற்றபோது அதன் கடற்கரையோரப் படுகைகள் உட்பட சரவாக்கின் எல்லைகளாக இருந்தன என்று சரவாக் மாநில சட்டமன்ற சபாநாயகர் அஸ்ஃபியா அவாங் நஸார் கூறினார்.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஃபியாவை மேற்கோள் காட்டிய டயாக் நாளிதழ் சரவாக்கின் கடலோரப் பகுதிகள் பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அரசியல் அமைப்புச் சட்டம், சட்டப்பூர்வமாக பெறப்பட்டது என்று மத்திய அரசாங்கம் வாதிட்டு வருகிறது. அதேசமயம் கூட்டரசு அமைப்புச் சட்டத்தின் விதி 2இன் கீழ் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு சந்தை விகிதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியது.
கூட்டரச அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 4(3) அத்தியாயம் 2ஐ சரவாக் சார்ந்திருக்கிறது. இதன் அடிப்படையிலேயே 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியாவில் இணைந்த பின்னரும் கடலோரப் பகுதிகள் தன்னுடைய எல்லைகளில் ஒரு பகுதியாக இருக்கிறது என்று சரவாக் தொடர்ந்து கோரி வருகிறது.
மாநில எல்லைகளை சீரமைக்கும் எந்தவொரு சட்டதிருத்தத்திற்கும் சரவாக் மாநில சட்டப்பேரவை , ஆட்சியாளர்கள் மாநாடு ஆகியவற்றின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதி 2 (b) கீழ் வரையறுக்கப்பட்டிருப்பதையும் சரவாக் சுட்டிக்காட்டி வருகிறது. இந்த நிபந்தனைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே எல்லை சீரமைப்புக்கான எந்த ஒரு திருத்தமும் அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது, செல்லுபடியாகாது என்று சரவாக் வாதிட்டு வருகிறது.
- கடலோரப் பகுதி
கடலோரப் பகுதி சட்டத்திற்குட்பட்டதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இங்குதான் சரவாக்கின் சட்ட நிலை சார்ந்திருப்பது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது என்று கடல்பகுதி சார்ந்த வழக்கறிஞர் லியூ தெக் ஹுவாட் கருத்துரைத்தார்.
1954 கவுன்சில் ஆர்டர் கீழ் சரவாக்கின் நீர் எல்லைப் பகுதியின் ஓரத்திலிருந்து கிட்டத்தட்ட 200 கடல் மைல்கள் வரை நீளும் கடலோரப் பகுதி உட்பட அதன் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சரவாக் கோரி வருகின்றது.
ஆனால் 200 கடல் மைல் நீளம் அந்த ஆர்டரில் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. இதனால்தான் இந்த கடலோரப்பகுதி சிக்கல் தீர்க்கப்பட முடியாமல் இன்னமும் தொடர்கிறது என்று லியூ சுட்டிக்காட்டினார். இந்த விவகாரமானது 1982 ஐநா கடல் சட்ட பிரகடனத்தில் (Unclos) முறையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரகடனமானது ஓர் அனைத்துலக உடன்படிக்கையாகும். இதுதான் அனைத்து கடல், கடல் நடவடிக்கைகளுக்கான விரிவான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. 1982ஆம் ஆண்டில் இந்த உடன்படிக்கையில் மலேசியா கையொப்பமிட்டது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் Unclos அங்கீகரிக்கப்பட்டது.




















