அனைத்து தடைகளும் நீங்கி வெளியானது கங்குவா : ரசிகர்கள் உற்சாகம்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள பிரமாண்ட படம் ‘கங்குவா’. 300 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டு பணிகள் தொடங்கியபோது பல பிரச்னைகளை சந்தித்து. தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட படம் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படத்திற்கு வழிவிட்டு தற்போது வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாங்கிய கடன்கள், அதை திருப்பிச் செலுத்தாது என ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு, அவைகள் அவ்வப்போது பணம் செலுத்தப்பட்டு சரிசெய்யப்பட்டது.

கடைசி நேரத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இந்தி உரிமைக்காக பெற்ற 1 கோடியே 60 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயாக திருப்பித் தராமல் ‘கங்குவா’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கு அவசரமாக விசாரிக்ககப்பட்டது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 1 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு தலைமைப் பதிவாளர் பெயரில் இரு வரைவோலைகள் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து படத்தை வெளியிட ஆட்சேபம் இல்லை என்று பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனால் எல்லா பிரச்னைகளையும் தாண்டி இன்று கங்குவா வெளியானது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் உற்சாகமாக தியேட்டர் முன் குவிந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த பான் இந்தியா படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here