பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைப்பதற்காக சொந்த மகளை கொன்று நாடகமாடிய தந்தை – கொடூர சம்பவம்

குஷிநகர்,உத்தரபிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைப்பதற்காக சொந்த மகளை கழுத்தை அறுத்து தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெபுவா நவுராங்கியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்நாராயண் சிங். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரது கடைசி மகள் (16 வயது) 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ம்தேதி சாத் பூஜைக்காக குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் சென்றிருந்த நிலையில் ஜெய்நாராயண் சிங் தனது கடைசி மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அன்று இரவு திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்ததாவும், அதைத் தடுக்கு முயன்றபோது, தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் போலீசில் ஜெய்நாரயண் சிங் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் தந்தையே மகளை கொன்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

விசாரணையில், ஜெய்நாரயண் சிங்குக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் தனது மகளை கொன்றுவிட்டதாக கூறி அவரை சிக்க வைப்பதற்காக இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக ஜெய்நாரயண் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார்  கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here