கோலாலம்பூர்:
வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 10 லட்சம் மலிவு விலை வீடுகளைக் கட்டித் தரும் இலக்குடன், புதிய ‘தேசிய வீடமைப்பு கொள்கை’ இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கோலாலம்பூர் KLGCC மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில், வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ங்கா கோர் மிங் இக்கொள்கையை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். “மக்களை மையமாகக் கொண்ட வீடமைப்பு” என்ற கருப்பொருளில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது 6 முக்கிய அம்சங்கள், 17 உத்திகள் மற்றும் 59 செயல்திட்டங்களை உள்ளடக்கியது.
இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள், வீடுகளின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையிலான சமநிலையின்மை, மற்றும் முடங்கிக் கிடக்கும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் ஆகிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
நேற்றைய நிகழ்வில் பேசிய அமைச்சர் ங்கா கோர் மிங், “தரமான வீடமைப்பு என்பது வெறுமனே தங்குமிடத்தை வழங்குவது மட்டுமல்ல; அது வளமான குடும்பங்கள், ஒற்றுமையான சமுதாயம் மற்றும் நிலையான நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான தூணாகும்” எனக் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் கட்டுமானத் துறையினருடன் இணைந்து, இக்கொள்கையின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதை அமைச்சு முழுமையாக உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
























