சைனைட்’ கொலை: தாய்லாந்துப் பெண்ணுக்கு மரண தண்டனை

பேங்காக்: ‘சைனைட்’ நஞ்சைக் கலந்து கொடுத்து தமது தோழியைக் கொன்ற குற்றத்துக்காகத் தாய்லாந்துப் பெண் ஒருவருக்கு நவம்பர் 20ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

36 வயது சராரட் ரங்சிவுதாபோர்னுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள 14 வழக்குகளில் முதல் வழக்கு விசாரணையிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.சராரட், சூதாட்டத்துக்கு அடிமையானவர் என்றும் பிறரை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பறித்த பிறகு, ‘சைனைட்’டைப் பயன்படுத்தி அவர்களைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது தோழியான திருவாட்டி சிரிபோர்ன் கன்வோங்கிற்கு சராரட் ‘சைனைட்’ நஞ்சு கலந்துகொடுத்து கொன்றதற்காகப் பேங்காக் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் இருவரும் சந்தித்து, பௌத்த சமய சடங்கின்படி மே கிலோங் ஆற்றில் மீன்களை விடுவித்தனர்.

சிறிது நேரம் கழித்து, திருவாட்டி சிரிபோர்ன் மயங்கி விழுந்து மாண்டார்.அவரது உடலில் ‘சைனைட்’ இருந்தது உடற்கூறாய்வில் தெரியவந்தது.இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அதற்கு முன்பு நடந்த பல ‘சைனைட்’ கொலைகளுக்கும் சராரட்டுக்கும் தொடர்பு இருந்ததை அதிகாரிகள் உணர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்த அந்தக் கொலைகளுக்குத் தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.“நீதிமன்றத் தீர்ப்பு நியாயமானது. என் மகளைப் பார்க்க முடியாமல் ஏங்கித் தவிக்கிறேன் என்றும் இன்று அவளுக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்றும் அவளிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று திருவாட்டி சிரிபோர்னின் தாயாரான திருவாட்டி தொங்பின் கியாட்சனாசிரி செய்தியாளர்களிடம் கூறினார்.

சூதாட்டப் பழக்கத்துக்குத் தேவையான பணத்தை சராசரட் மொத்தம் 15 பேரிடமிருந்து கடன் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.பிறகு அவர்களில் 14 பேரை ‘சைனைட்’ பயன்படுத்தி கொன்று அவர்களது நகை, கைப்பேசிகள் ஆகியவற்றை சராரட் திருடியதாகக் காவல்துறை கூறியது.

அவர்களில் ஒருவர் உயிர் பிழைத்ததாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்தது.இதற்கிடையே, ‘சைனைட்’ கொலைகள் தொடர்பான விசாரணையை முறையாக நடத்தாததற்காகக் காவல்துறையில் லெஃப்டினென்ட் கர்னலாகப் பதவி வகித்த சராரட்டின் முன்னாள் கணவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.சராரட்டின் முன்னாள் வழக்கறிஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here