12 மனைவிகள், 102 பிள்ளைகள், 578 பேரப்பிள்ளைகள். சமாளிக்க முடியாமல் திணறுகிறேன்!

புகிஸா (உகாண்டா), ஜூலை 3-

68 வயது உகாண்டா முதியவர் பேட்டி

என்னுடைய பெரிய குடும்பத்திற்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறேன் என்று கண்ணீர் சிந்துகிறார் 68 வயதான மூசா ஹஸாயா கசிரா என்பவர். இவர் இப்படிப் புலம்புவதற்குக் காரணம் இருக்கின்றது.  பெரிய குடும்பம் என்று சொல்லும் இவருக்கு மொத்தம் 12 மனைவிகள் உள்ளனர். 102 பிள்ளைகள் இருக்கிறார்கள். பேரப்பிள்ளைகள் எண்ணிக்கை 578. ஆரம்பத்தில் வாழ்க்கையை விளையாட்டாக நினைத்து விட்டேன். இப்போது பெரிய துன்பத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

என்னுடைய உடல்நிலையும் முன்புபோல் இல்லை. இப்போது என்னிடம் சுமார் 2 ஏக்கர் நிலம்தான் உள்ளது. ஒரு பெரிய குடும்பத்திற்கு இந்த 2 ஏக்கர் நிலம் மூலம் கிடைக்கும் வருமானம் போதவில்லை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களையும் உணவுகளையும் வாங்க முடியவில்லை. பிள்ளைகளின் கல்விச் செலவையும் ஆடைகளுக்கான செலவையும் சமாளிக்க முடியவில்லை. இதனால் வெறுப்படைந்த 12 மனைவிகளுள் இரண்டு பேர் என்னை விட்டுச் சென்று விட்டார்கள் என்று மூசா தெரிவித்தார்.

உகாண்டாவில் மிகவும் உட்புறமான பகுதியான புதாலேஜ் எனும் மாவட்டத்தில் புகிஸா கிராமத்தில் இவருடைய வீடு இருக்கிறது. கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில் இடம் போதவில்லை. என்னுடைய மேலும் 3 மனைவிகள் என் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தள்ளி வசிக்கிறார்கள் என்றார் அவர். 1972ஆம் ஆண்டு முதல் மனைவியைத் திருமணம் செய்தேன். அப்போது எங்களுக்கு 17 வயதாக இருந்தது. ஒரு வருடம் கழித்து முதல் குழந்தை பிறந்தது. குடும்ப வாரிசு பெருக வேண்டும் என்று  கூறிய என்னுடைய அண்ணன்மார்களும் உறவினர்களும் இன்னும் அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள் என்று என்னிடம் கூறினார்கள்.

அப்போது நான் பெரிய அளவில் கால்நடைகளை வளர்த்து வந்தேன். இதனால் கிராமத்தில் இருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு எனக்குப் பெண் கொடுக்க முன் வந்தார்கள். அவர்களுள் சிலர் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தார்கள். 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் சமய பாரம்பரியத்தின்படி பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. 

இந்த முதியவருக்கு மொத்தம் 102 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் 10 முதல் 50 வயதுடையவர்கள். இவருடைய 12 மனைவிகளுள் ஒருவருக்கு 35 வயதாக  இருக்கின்றது. எனக்கு மூத்த பிள்ளையின் பெயரும் கடைசிப் பிள்ளையின் பெயரும் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. மற்ற பிள்ளைகளின் பெயர்கள் ஞாபகத்திற்கு வரவில்லை.

என்னுடைய பிள்ளைகளின் பிறந்த தேதி பற்றி யாராவது கேட்டால் நான் பழைய நோட்டுப் புத்தகங்களைத்தான் தேட வேண்டி இருக்கிறது என்று அவர் சொன்னார். 102 பிள்ளைகள் என்பதால் அவர்களின் பெயர்கள் எப்படி என் நினைவில் இருக்கும். என் மனைவிகளைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்வேன்.

அது மட்டுமன்றி என்னுடைய 12 மனைவிகளுள் பலருடைய பெயர் எனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார். பெரிய குடும்பம் என்பதால் அடிக்கடி பிரச்சினை வரும். இதனால் ஒவ்வொரு மாதமும் மனைவிகளையும் பிள்ளைகளையும் அழைத்து கூட்டம் போட்டு அதற்குத் தீர்வு காண்பேன் எனவும் அவர் சொன்னார். 

முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதெல்லாம் இந்த நபர் 2ஆவது மனைவி, 3ஆவது மனைவி, 4ஆவது மனைவி எனத் தொடர்ச்சியாக 12 பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். இப்படி 12 பெண்கள் அவருக்கு மனைவிகளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஏன்  அந்தப் பெண்கள் அவரை விட்டுப் பிரிந்து செல்லவில்லை எனக் கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவருடைய மனைவிகளுள் ஒருவரான ஜபினா என்பவர்,  எங்கள் கணவர் மீதுள்ள பாங்ம்தான் இதற்குக் காரணம் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here