கோலாலம்பூர், நவ. 25-
இன்றைய டிஜிட்டல் காலகட்டத் தில் பகடிவதை நாம் தினமும் கேட்கும். பார்க்கும் ஒரு விஷயமாக மாறி வருவது கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. காரணம் பகடிவதையை தாங்கிக் கொள்ளக் கூடிய அல்லது சாதாரணமானது என்று பலர் நினைக்கின்றனர்.
மலேசியாவில் பகடிவதை குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதும் வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாக கியுட்ரா நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி மோர்னா தெரிவித்தார். பகடிவதை தொடர்பான சட்டதிருத்தத்தை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வர இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அரசாங்கம் அந்த சட்டதிருத்தத்தைக் கொண்டு வரும்போது நிபுணர்கள், ஆய்வாளர்களிடம் கலந்துரையாடல் களை நடத்தி கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று மோர்னா வேண்டுகோள் விடுத்தார்.
சமூக ஊடகங்கள். இணையதளம் வழி வெளியாகும் செய்திகள் தொடர்பல் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஒரு பொய்யான செய்தியைப் பலர் பகிரும் போது அதன் உண்மைத் தன்மை குறித்து யாரும் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. ஒரு பொய்யை 10 முறை திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகி விடும் என்றால் அது மிகையாகாது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நினைப்பவர்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நம் நாட்டில் நடந்தேறும் பகடிவதை வழக்குகள் குறித்து நாம் அறிவோம். அதற்கு அண்மையில் நிகழ்ந்த இஷாவின் மரணத்தை நாம் இங்கே குறிப்படலாம். ஒரு மனிதருக்கு மரணம் என்பது ஒரு முறை நிகழ்வது. ஆனால் பகடிவதையில் சிக்கித் தவிப்பவர்கள் தினம் தினம் மரண பயத்தையும் வேதனையையும் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
விலை மதிப்பல்லாத உயிர்கள் பகடிவதை காரணமாக தற்கொலையில் பறிபோவது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரசாங்கம் பகடிவதை சட்டதிருத்தத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதன் தொடர்புடைய இதர விஷயங்களில் சட்டதிருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
மேலும் பகடிவதை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு குறிப்பாக இளையோர் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மோர்னா கோரிக்கை விடுத்தார்.
தகவல் பல்லூடக சட்டம்
மலேசியாவில் 1998இல் தகவல் பல்லூடக சட்டம்
இயற்றப்பட்டது. செக்ஷன் 233 கீழ் மிரட்டல், அவதூறு. ஆபாச வார்த்தைகள், தவறான செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட குற்றத்திற்கு ஓராண்டுச் சிறை. 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன.
செக்ஷன் 233இல் சட்டதிருத்தத்தைக் கொண்டு வர அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. சட்டதிருத்தம் வலுவானதாகவும் அதே வேளை பகடிவதை செய்தது நிரூபக்கப்பட்டால் தண்டனை கடுமையானதாகவும் இருக்க வேண்டும். தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் அதே வேளை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இச்சட்டங்கள் இருக்க வேண்டும்.
தவறு செய்தால் அதில் இருந்து தப்பக்க முடியாது என்ப தனை பகடி வதை யில் ஈடுபடுபவர்கள் உணரும் வகையில் சட்டதிருத்தம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பகடிவதை பொறுத்துக் கொள்வதல்ல
பகடிவதையைப் பொறுத்துக் கொள்வதோ அல்லது அமைதியாக இருப்பதோ இதற்குத் தீர்வாகாது. பகடிவதையில் சிக்கித் தவிப்பவர்கள் முன்வந்து போலீஸ் புகாரினைச் செய்ய வேண்டும். நம்முடைய பயம் அல்லது தயக்கம் மற்றவர்களுக்கு நாமே தவறு செய்பவர்களுக்கு வாய்ப்பனை வழங்குவதாகும். அதனால் உங்களில் யாராவது பகடிவதை சித்திரவதையில் சிக்கி இருந்தால் உடனடியாக புகாரளியுங்கள்.
மாற்றத்தை நம்மில் கொண்டு வருவோம். பகடிவதை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் அனைவருக்கும் உணர்த்துவோம். போலீஸ் புகார் செய்து விட்டால் அது போலீஸ்காரர்களின் பணி என்று நினைக்காமல் நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் இருந்து பகடிவதையில் இருந்து மீள்வோம்.








