சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 38 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வரும் நிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருக்கும் குஜராத் மற்றும் திரிபுரா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று துவங்கியது.
இந்தூரில் துவங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
திரிபுரா இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய திரிபுரா அணியில், ஓபனர் ஶ்ரீதம் பௌல் 57 (49) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். கேப்டன் மந்தீப் சிங் 7 (7), சினிவாஸ் சரத் 29 (23), ராஜத் தே 6 (5), சம்ரத் சுத்ரதார் 2 (5) போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ஸ்கோர்களை அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்களைதான் எடுத்தது.
நாக்வஸ்வல்லா 3/35 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். சின்தன் கஜா 2/18 விக்கெட்களை சாய்த்தார்.
மிரட்டல் வெற்றி:
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் அணியில், ஓபனர்கள் ஆர்ய தேசாய், உர்வில் படேல் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்நிலையில், ஆர்ய தேசாய் 38 (24) ரன்களை மட்டும் எடுத்து நடையைக் கட்டினார்.
இருப்பினும், மறுமுனையில், உர்வில் படேல் தொடர்ந்து காட்டடி அடித்து, ஸ்கோரை உயர்த்த ஆரம்பித்தார். பவுண்டரி, சிக்ஸர்களை அசால்ட்டாக அடித்த அவர், இறுதியில் 28 பந்துகளிலேயே சதம் அடித்து, டி20 பார்மெட்டில் அதிவிரைவாக சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
மொத்தம் 35 பந்துகளை எதிர்கொண்ட உர்வில் படேல், அதில் 7 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்களை குவித்து அசத்தினார். ஸ்ரைக் ரேட் 322.86ஆக இருந்தது. இவரது அதிரடி காரணமாக, குஜராத் அணி,10.2 ஓவர்களிலேயே 156/2 ரன்களை குவித்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
உர்வில் படேலை, கடந்த சீசனில் குஜராத் டைடன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், ஐபிஎல் 2025 ஏலத்தில் இவர் இடம்பெற்றிருந்த நிலையில், எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.