பெட்டாலிங் ஜெயா:
வட தீபகற்ப மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, KL சென்ட்ரல் மற்றும் ஹட்யாயை இணைக்கும் MySawasdee ரயில் சேவையை இன்று முதல் டிசம்பர் 2 வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக KTMB நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த வழித்தடத்தில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக MySawasdee சேவையில் ஈடுபட்டுவரும் 1004 மற்றும் 1005 இலக்கமுடைய ரயில்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாக KTMB தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த நாட்களில் பயணத்திற்காக முன் பதிவு செய்த பயணிகளுக்கு முழுப் பணத்தையும் திரும்பப் பெற உரிமை உண்டு என்றும், இதனை KTMB மொபைல் செயலி (KITS) மூலம் செயல்படுத்திக்கொள்ளலாம் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
“மேலும் உதவிக்கு, பணியில் இருக்கும் எங்கள் நிலைய ஊழியர்களையோ அல்லது KTMB இன் அழைப்பு மையத்தையோ +60 3-9779 1200 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக அணுகவும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









