பெங்களூரு,அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண், கடந்த 23-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலன் ஆரவ் ஹனாய்(21) என்பவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து 2 நாட்களாக அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வராத நிலையில், 26-ந்தேதி ஆரவ் மட்டும் அறையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.
அவர் சென்ற பிறகு அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கிருந்த ஊழியர்கள் சந்தேகமடைந்து அறையை திறந்து பார்த்தபோது, இளம்பெண் மாயா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில், 2 நாட்களாக அறையில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, அல்லது அறைக்கு உள்ளே வரவோ இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஆரவ் ஹனாய் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவின் புறநகர் பகுதியில் ஆரவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார்தெரிவித்துள்ளனர்.