எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்பதைப் போல, ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில், பல ட்விஸ்ட்கள் இருந்தன.
பெரிய தொகைக்கு ஏலம் போவார் எனக் கருதப்பட்ட கே.எல்.ராகுல், வெறும் 14 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். ரிஷப் பந்தை 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல், ஷ்ரேயஸ் ஐயரை 26.75 கோடிக்கு, பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் 18ஆவது சீசனில் பெரிய ட்விஸ்ட்டாக வெங்கடேஷ் ஐயர் இருந்தார். மிஞ்சி மிஞ்சி போனால், இவர் 5 கோடி வரை மட்டுமே ஏலம் போக வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இவரை 23.75 கோடிக்கு வாங்கி, திகைக்க வைத்தது.
அந்த அணியில், ஏற்கனவே வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஆண்ட்ரே ரஸல் இருக்கிறார். மேலும், கடந்த சீசனில் கூட, வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் மட்டுமே செய்திருந்தார். சில ஓவர்களை மட்டுமே வீச முடிந்தது. இப்படியிருக்கையில், வெங்கடேஷ் ஐயருக்கு ஏன் இவ்வளவு தொகையை கொடுத்தார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள, இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக வெங்கடேஷ் ஐயர்தான் இருப்பார். இதனால்தான், அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்துள்ளனர் எனக் கூறினார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ‘‘கொல்கத்தா அணியால், பெரிய ஸ்டார் வீரர்களை கேப்டன் வீரராக வாங்க முடியவில்லை. ரிஷப் பந்த், கே.எல்.ராகுலை அவர்கள் வாங்கவில்லை. இதனால், கேப்டன் வீரராக ஒருவர் தேவை என்பதால், கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இதனால்தான், அவருக்காக அதிக தொகை வரை ஏலம் கேட்டுள்ளனர். வெங்கடேஷ் ஐயரை கேப்டனாக முன்பே தேர்வு செய்திருந்தால், அவரை தக்கவைத்திருக்கலாமே? ஏலத்தில் அவர்கள் நினைத்த கேப்டன் வீரரை வாங்க முடியவில்லை என்பதால்தான், வெங்கடேஷ் ஐயரை வாங்கியுள்ளனர் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது’’ எனக் கூறினார்.









