கோலாலம்பூர்:
சாலைப் போக்குவரத்துத் துறையினர் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடத்திய 29 நாள் சிறப்பு மோட்டார்சைக்கிள் சோதனை நடவடிக்கையில் மொத்தம் 78,152 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளோட்டிகள்,சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வதை வலியுறுத்துவது அந்தச் சிறப்பு நடவடிக்கையின் நோக்கம் என்று, சாலைப் போக்குவரத்துத் துறையின் திட்டமிடல், செயலாக்கப் பிரிவுத் துணைத் தலைமைச் செயலாளர் ஜஸ்மானி ஷஃபாஃபி கூறினார்.
சிறப்பு நடவடிக்கையில் பிடிபட்டோரில் பெரும்பாலோர் உரிமமின்றி மோட்டார்சைக்கிள் ஓட்டியவர்கள் என்று அவர் தெரிவித்தார். அதன் தொடர்பில் 22,601 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், வாகனப் பதிவெண் பலகை இல்லாததன் தொடர்பில் 16,789 பேருக்கும், காப்புறுதி இல்லாததன் தொடர்பில் 15ம்117 பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
காலாவதியான உரிமம், அனுமதிக்கப்பட்டதைவிடக் குறைவான வயதில் மோட்டார்சைக்கிளை ஓட்டியது போன்றவை தொடர்பிலும் மொத்தம் ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டனர்.
இத்தகைய எச்சரிக்கைகளில் 1,530, மோட்டார்சைக்கிள் ஓட்டிய அல்லது பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்த வெளிநாட்டினருக்கு விடுக்கப்பட்டவை.
சிறப்பு நடவடிக்கையில் 2.125 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார்சைக்கிளோட்டிகள் 234 பேரிடம் போதைப்பொருள் தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 34 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது என்று ஜஸ்மானி கூறினார்.
அரச மலேசிய காவற்படையின் பதிவுகளின்படி, மரணம் விளைவிக்கும் மோட்டார்சைக்கிள் விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததை அடுத்து இவ்வாறு சிறப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.