கோலாலம்பூர்:
அதிகரித்துவரும் முதலீடுகளை, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்பத் துறையில் காணப்படும் முதலீடுகளை, உள்ளூர் நிறுவனங்கள் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவுறுத்தியுள்ளார்.

பினாங்கின் பிறை தொழில்துறை வட்டாரத்தில் (Prai Industrial Zone) அமைந்திருக்கும் CG Global Profastex Manufacturing Sdn. Bhd. நிறுவனம் வெற்றிகரமாக உலகச் சந்தையில் நுழைந்திருப்பதை அன்வார் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

“உலகச் சந்தைக்குள் வெற்றிகரமாக நுழைந்ததற்காக CG Global நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் (நிறுவன ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள்) நான் வாழ்த்து தெரிவித்து ஊக்கமளிக்கிறேன். அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள், அனுகூலங்கள் உள்ளிட்டவற்றினால் அது சாத்தியமானது,” என்று பிரதமர் தண்டு X சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தார்.
‘பூமிபுத்திராக்களால் ’ நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனமான CG Global நிறுவனத்திற்கு பிரதமர் நேற்று (டிச.7) நேரில் சென்றுப் பார்வையிட்டார். சிஇஎம் (CEM) மின்சாரப் பொருள் உற்பத்திச் சேவைகளில் அந்நிறுவனம் மலேசியாவில் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், ஆண் தொழிலதிபர்களைப் போல் பெண் தொழிலதிபர்களும் வளர்ச்சி காண்பதை உறுதிசெய்வதில் தமது அமைச்சு என்றும் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். பிரதமருடன் CG Global நிறுவனத்திற்கு சென்ற அவர், அந்நிறுவனம் உள்ளூர் மலாய் பெண்களுக்குச் சொந்தமானது என்றும், அது 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.























