கோலாலம்பூர்:
நாட்டின் 6 மாநிலங்களில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளம் காரணமாக, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கானவர்களில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நிலவரப்படி, 10,272 பேரிடம் நீரால் பரவிய நோயை மலேசிய சுகாதார அமைச்சு கண்டறிந்தது.
இதில் 6,730 பேரிடம் தீவிர சுவாசத் தொற்றும் 3,021 பேரிடம் தோல் தொற்றும் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அமாட் தெரிவித்தார்.
மேலும் 298 பேரிடம் தீவிர இரைப்பைக் குடலழற்சியும் (gastroenteritis) 190 பேரிடம் விழி வெண்படல அழற்சியும் (conjunctivitis) 13 பேரிடம் கை, கால், வாய்ப்புண் நோயும் 20 பேரிடம் பெரியம்மையும் கண்டறியப்பட்டது என்றார்.
தற்காலிக நிவாரண மையங்களில் கண்டறியப்பட்ட அனைத்து தொற்று நோய்களும் கட்டுக்குள் இருப்பதை அமைச்சர் சுட்டினார். மேலும் அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், தொற்றுநோய் பரவலைத் தடுக்க தனிப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 7) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும் வெள்ளத்தால் 121 சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 56 கிராமப்புற மருந்தகங்கள், 34 சுகாதார மருந்தகங்கள், 19 பல் மருந்தகங்கள், ஐந்து மாவட்ட சுகாதார அலுவலகங்கள், ஆறு மருத்துவமனைகள் என்பவை அடங்கும் என அவர் விவரித்தார்.
இருப்பினும் தற்போது, 87 சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், 31 நிலையங்கள் தங்களது சேவைகளை மாற்று நிலையங்களுக்கு இடமாற்றியுள்ளன,” என்றும் அவர் சொன்னார்.




















