இது வெறும் ஆரம்பம் தான்… இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பல் கடத்தல்

சனா: இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பலை ஏமனில் இயங்கும் ஹவுதி படை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர்கள் பரபர அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் எப்போது தொடங்கியதோ அப்போது முதலே மத்திய கிழக்குப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கே வரிசையாக நடக்கும் சம்பவங்கள் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் இந்த இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தொடரும் நிலையில், மறுபுறம் லெபனான், ஈரான் நாடுகளில் உள்ள போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. இதனால் அங்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சரக்கு கப்பல்: இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏமனில் இருக்கும் ஹவுதி குழு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த சர்வதேச சரக்கு கப்பலை கைப்பற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்த சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்த நிலையில், அதை ஹவுதி குழு கடத்தியுள்ளது. கேலக்ஸி லீடர் என்ற அந்த கப்பலையும் அதில் இருந்த 25 பணியாளர்களையும் ஹவுதி குழு கடத்தி இருக்கிறது.

கடத்தப்பட்ட அந்த கப்பலும் அதில் இருந்த பணியாளர்களும் இப்போது ஏமன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ஹவுதி குழு வெளியிட்டுள்ளது. அதில் சரக்கு கப்பல் மீது ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறது. அதிரடியாகக் கப்பலில் நுழைந்த ஹவுதி குழு வெறும் சில நிமிடங்களில் அந்த ஒட்டுமொத்த கப்பலையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஈரான் படைகள் இந்த முறையையே கடைப்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுதி படை: கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டின் கப்பல்களைக் கடத்துவோம் என்று ஹவுதி அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு வந்த இந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிட்டன் நாட்டிற்குச் சொந்தமான இந்தக் கப்பலை ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான் அரசுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கும் ஹவுதி படை, இஸ்ரேலை நோக்கி தொடர்ச்சியான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஹவுதி ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் அலி அல்-மோஷ்கி இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இஸ்ரேல் கப்பல்கள் தான் எங்கள் இலக்கு.. இஸ்ரேல் கப்பல்கள் எங்கிருந்தாலும் அவை தான் எங்கள் இலக்குகள். அந்தக் கப்பல்களை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நாங்கள் தயங்கவே மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

என்ன காரணம்: அந்தக் கப்பல் ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படும் போதிலும், அதற்கு இஸ்ரேல் தொழிலதிபர் ஆபிரகாம் ராமி உங்கர் என்பவருடன் தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே கப்பலைக் கடத்தியதாகவும் ஹவுதி தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையிலேயே இந்தக் கப்பலைக் கடத்தியுள்ளதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.

இது தொடக்கம் மட்டுமே: மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு கப்பல் கடத்தப்பட்டது வெறும் தொடக்கம் மட்டுமே என்றும் வரும் நாட்களில் இது தொடரும் என்றும் ஹவுதி செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்-சலாம் தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாத வரை தங்களின் கடல்வழி தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். செங்கடல் பகுதியில் உள்ள பாப் அல்-மண்டப் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், அங்கே ஹவுதியின் நடமாட்டம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here