தடைபட்ட திருமணம் நடந்தது; தந்தையின் கடமையை நிறைவேற்றிய ராணுவ வீரர்கள்!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மகளின் திருமண நேரத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் கடமையை, சக ராணுவ வீரர்கள் நிறைவேற்றி வைத்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுபேதார் தேவேந்திர சிங். இவருக்கு வயது 48. இவரது மகள் ஜோதிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் ராணுவ வீரர் சுபேதார் தேவேந்திர சிங் விடுமுறையில், மகள் கல்யாணத்திற்காக சொந்த ஊர் திரும்பினார். மகள் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை ஆசையோடு செய்தார். திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு இவர் தனது, உறவினர் ஒருவரோடு மாண்டிற்கு காரில் சென்றார். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் வருத்தம் அடைந்தனர்.

ஜோதி தனது தந்தை இறந்த சோகத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதையறிந்த, சுபேதார் தேவேந்திர சிங் உடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மதுராவிற்கு விரைந்தனர். தந்தையின் கனவு உனது திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பது தான் எனக் கூறி ஜோதியை மனம் மாற்றம் செய்தனர். இதையடுத்து, திருமணம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். ராணுவ வீரர்கள் திருமணத்தை சிறப்பாக நடத்தினர். விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் கடமையை, சக ராணுவ வீரர்கள் நிறைவேற்றி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணமகளின் மாமா நரேந்திர சிங் என்பவர் கூறியதாவது: எனது உறவினர் சுபேதார் தேவேந்திர சிங் உயிரிழந்ததும் குடும்பமே சிதைந்து போனது. ஆனால் ராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமண விழாவை சிறப்பாக நடத்த வலிமையை கொடுத்தனர். உறவினர்களும், கிராம மக்களும் மணமக்களை வாழ்த்தினர். இவ்வாறு அவர் கூறினார். மணமகன் சவுரப் சிங் தந்தை சத்யவீர், உயிரிழந்த ராணுவ வீரர் சுபேதார் தேவேந்திர சிங்குடன் இணைந்து ராணுவத்தில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here