ஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்

கிவ்,ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022-ம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை பின்னர் உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் பலன் ஏற்படவில்லை.

போரில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் அரசு கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இதேபோன்று வடகொரியா நாடு, ரஷியாவுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன.

மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது” என்று அதில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.மேலும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோவனோவ்கா கிராமத்தின் கட்டுப்பாட்டை ரஷியப் படைகள் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், உலகில் நடக்கும் போர்களை தான் நிறுத்தப்போவதாக அறிவித்தார். இந்த சூழலில் பாரிசில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்த டிரம்ப் ரஷியாவிற்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்த ரஷிய வெளியுறவுத்துறை போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here