இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (டிசம்பர் 8) பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவரைக் காணவில்லை. 49 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்தார்.
‘கப்பால் லயார் மோட்டார் ஃபஜார் லோரெனா’ எனும் மரக்கப்பல் ஜகார்த்தா நேரப்படி 1.10 மணியளவில் சிட்டுபோன்டோவுக்கு அருகே காணாமல் போனது.
அந்தக் கப்பல் கிழக்கு ஜாவாவில் உள்ள சுமெனெப் வட்டாரத்திலிருந்து புறப்பட்டு சிட்டுபோன்டோ வட்டாரத்தை நோக்கிச் சென்றது. இரண்டு வட்டாரங்களும் கிழக்கு ஜாவாவில் இடம்பெற்றுள்ளன.
“இந்தச் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார். ஒருவரைக் காணவில்லை. 49 பேர் உயிர் தப்பினர்,” என்று வட்டார தேடுதல் மீட்பு அலுவலகத்தின் தலைவரான முஹமட் ஹரியாடி கூறினார்.
ஐம்பது பேரை மீட்கும் வேலையில் மீட்புக் குழு இறங்கியது. காணாமல் போனவரைத் தேடி வருகிறோம் என்றார் அவர்.
இந்தச் சம்பவத்துக்கு மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்ற ஹரியாடி, பெரிய அளவில் அலைகள் எழுந்ததாகக் கூறினார்.
ஏற்கெனவே, இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் மோசமான பருவநிலை காரணமாக பெரிய அலைகளுடன் கனமழை பெய்யலாம் என்பதால் கடற்துறை பயணத்திற்கு ஆபத்து என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.