இத்தாலியில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற வரலாறு படைத்தார்.
ஆஸி., ஓபன், யு.எஸ்., ஓபன் உட்பட நடப்பு ஆண்டில் 8 கோப்பை வென்ற சின்னர், ஒட்டுமொத்தமாக தனது 18வது ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் இவான் லெண்டிலுக்கு (1986) பின், இத்தொடரில் ஒரு செட் கூட இழக்காமல் கோப்பை வென்ற வீரரானார் சின்னர். சின்னருக்கு கோப்பையுடன், ரூ. 41 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது, ஏ.டி.பி., பைனல்ஸ் வரலாற்றில் வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகையானது. இதற்கு முன் 2022ல் வெற்றி பெற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரூ. 40 கோடி பரிசாக பெற்றிருந்தார். இம்முறை பைனல் வரை சென்ற டெய்லர் பிரிட்ஸ், ரூ. 18 கோடி பரிசு வென்றார்.
பிரிட்ஸ் ‘நம்பர்-4’ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இத்தாலியின் சின்னர் ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் பைனல் வரை சென்ற அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ், 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முறையே 2, 3வது இடத்தில் நீடிக்கின்றனர்.