மகுடம் சூடிய ஸ்பானிய மகளிர்; இங்கிலாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது

சிட்னி:

மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் மகுடம் சூடியது. உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் வென்றிருப்பது இதுவே முதல்முறை.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினும் இங்கிலாந்தும் மோதின.

இறுதி ஆட்டத்துக்கு முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து கிண்ணத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.

ஆனால் நடந்ததோ வேறு.

விறுவிறுப்புடன் விளையாடிய ஸ்பெயினை அக்குழுவால் முறியடிக்க முடியாமல் போனது.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஓல்கா கர்மோனா அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.

ஸ்பெயின் முன்னிலை வகிக்க, இங்கிலாந்து சற்று பதற்றம் அடைந்தது என்றே சொல்ல வேண்டும்.

தடுமாற்றம் ஒருபுறம் பிடித்து இழுக்க, ஸ்பெயின் புயல் வேக விளையாட்டு இங்கிலாந்தைத் திக்குமுக்காட வைத்தது.

இந்நிலையில், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்பெயினுக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பந்தைத் தடுத்து நிறுத்தினார் இங்கிலாந்தின் கோல்காப்பாளர்.

எனவே, இறுதி வரை ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆட்டத்தை எப்படியும் சமன் செய்துவிட வேண்டும் என்ற இலக்குடன் இங்கிலாந்து இருந்தது.

90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரமாக 13 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், ஸ்பெயின் விட்டுக்கொடுக்காமல் விளையாடி முன்னிலையைத் தக்க வைத்துக்கொண்டது.

நடுவர் ஆட்டத்தை முடித்து வைத்தபோது ஸ்பானிய மகளிர் கொண்டாட்ட மழையில் நனைந்தனர்.

மறுமுனையில் இங்கிலாந்து மீளாத் துயரம், ஏமாற்றத்துடன் திடலைவிட்டு வெளியேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here